தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் முதல்வருக்கு ஆதரவாகத் தொடர்ந்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அரியர் தேர்வுக்காகக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதக் காத்திருந்த மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் 24க்கும் மேற்பட்ட பேப்பர்களில் அரியர் வைத்தவர்களும் தேர்ச்சி பெற்றனர். இது மாணவர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு வகையிலும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதோடு ஆங்காங்கு போஸ்ட்டரும் ஒட்டி வருகின்றனர்.முன்னதாக, ஈரோட்டில் அரியர் மாணவர்களின் அரசனே வாழ்க வாழ்க என்று போஸ்டர் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து கோவையில் மாணவர்கள் சிலர், மாணவர்களின் மனிதக் கடவுளே! எங்கள் ஓட்டு உங்களுக்கே! என்ற வரிகளுடன் போஸ்டர் ஒட்டியது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது திண்டுக்கல்லில் மாணவர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் வைத்துள்ளனர். அதில் மாணவர்களின் பாகுபலியே, அரியரை வென்ற அரசனே என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.