Home > செய்திகள் > தமிழகத்தில நீட்தேர்வை ரத்து செய்வது எப்படி – மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தில நீட்தேர்வை ரத்து செய்வது எப்படி – மு.க.ஸ்டாலின் விளக்கம்

நீட் தேர்வை எப்படி ரத்து செய்வோம் என ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

சட்டமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்த நிலையில் முதல்வர் முன்வைத்த விமர்சனங்களுக்கு தனித் தனியாக கேள்வி-பதில் வடிவில் பதிலளித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில், “2010ஆம் ஆண்டு நீட் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? மத்தியில் அப்போது யார் ஆட்சி இருந்தது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலில் 2010ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. இங்கு திமுக ஆட்சி நடைபெற்றதால் கலைஞர், உடனடியாக உயர் நீதிமன்றத்தை நாடி நீட் தேர்வைக் கொண்டு வரும் விதிகளுக்கு தடையுத்தரவு வாங்கினார். திமுக இருந்த 2011ஆம் ஆண்டுவரை நீட் தேர்வு செயல் வடிவத்திற்கும் வரவில்லை. தமிழகத்தில் நீட் தேர்வும் நடக்கவில்லை. தைரியம் இருந்தால் திமுக ஆட்சியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது என்று ஒரு ஆதாரத்தை வெளியிடட்டும்” என்று சவால் விடுத்தார்.

தொடர்ந்து, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிருந்த போதே 18.7.2013ல் நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தது; நீட் வரவில்லை. நீட் தேர்வும் நடக்கவில்லை. 2014ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது. அதற்கு அன்றிலிருந்து திரைமறைவிலும் பொதுவெளியிலும் அதிமுக. ஆதரவு அளித்து வந்தது; பிறகு கூட்டணியாகவே மாறியது. பாஜகவிற்கு அதிமுக உள்நோக்கத்துடன் ஒத்துழைப்பு கொடுத்ததன் விளைவாகவே 2016ல் நீட் மீண்டும் வந்தது” என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின்,

“இதுபோலவே நீட் மசோதா மாநிலங்களவையில் வந்தபோது அதை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது. திமுக. அதை எதிர்க்கவில்லை என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி.

மக்களவையிலும் (39 எம்.பிக்கள்) – மாநிலங்களவையிலும் (13 எம்.பி.க்கள்) சேர்த்து 52 எம்.பிக்களைக் கொண்ட அதிமுக அப்போது என்ன செய்தது? வெளிநடப்பு செய்தது. ஏன் நீட் மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லை” என கேள்வி எழுப்பியவர், ஆனால் திமுகவிற்கு வெறும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் என்றாலும் நீட் தேர்வை எதிர்த்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள் என்று அன்று ஆணித்தரமாக வலியுறுத்தியது திமுக என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “நீட் தேர்வை எப்படி ரத்து செய்வார் ஸ்டாலின் என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். அலுவல் மொழியாகத் தமிழும் ஆங்கிலமும் தொடரும் என்று தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்ததைப் போலவும் நுழைவுத் தேர்வை ரத்து செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்று அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது போலவும்; முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது, ஜல்லிக்கட்டு மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது போலவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட வழிகளைப் பயன்படுத்தி சட்டமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவைப்படுங்கால் நீதிமன்றங்களின் ஆதரவைப் பெற்று நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் விளக்கம் அளித்துள்ளார் ஸ்டாலின்.

You may also like
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..
செம்மொழி பட்டியலில் தமிழ் சேர்ப்பு; மு.க ஸ்டாலின் வரவேற்பு

Leave a Reply