Home > செய்திகள் > டெல்டா மக்களுக்கு கஜா புயல் கற்றுதந்த பாடம்

டெல்டா மக்களுக்கு கஜா புயல் கற்றுதந்த பாடம்

டெல்டா மக்கள் கஜா அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாததால், தற்போதைய நிவர் புயலை முன்னிட்டு தாங்களாகவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

2018 நவம்பர் மாதம் டெல்டாவைத் தாக்கிய கஜா புயலால் சுமார் பத்து நாட்கள் மின்சாரம் இல்லாமல், மளிகைப்பொருட்கள், காய்கறிகள் இல்லாமல் டெல்டா மக்கள் கடும் துயரப்பட்டார்கள்.

புயலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் அதிகமாக பாதிப்பு இல்லையென்றாலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொருட்கள் வாங்க முடியாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

எனவே நிவர் புயல் நெருங்குகிறது என்று டிவிகளிலும்,வாட்ஸ் அப்புகளிலும் செய்திகள் வரத் தொடங்கியபோதே டெல்டா மக்கள் உஷாராகிவிட்டனர். சுமார் நான்கைந்து நாட்களுக்குத் தேவையான தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், மண்ணெண்ணெய், மளிகை சாமான்கள் போன்ற பொருட்களை நவம்பர் 24 ஆம் தேதியே வாங்கத் தொடங்கிவிட்டனர்.

பலரும் தங்கள் வீட்டு வாசலில், கொல்லையில் இருக்கும் மரங்கள் மின்சாரக் கம்பிகளின் மீது சாயாதவாறு கிளைகளை எல்லாம் தாங்களே வெட்டி எறிந்துவிட்டனர். 

தீபாவளி, பொங்கலுக்கு ஷாப்பிங் செய்வது போல் புயலை ஒட்டிய ஷாப்பிங் நேற்று நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தீவிரமானது.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது போல புயலுள்ளபோதே காய்கறிகள் விலையையும் ஏற்றி விற்க ஆரம்பித்தனர் வியாபாரிகள்.

23 ஆம் தேதி தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்றது. அதே ஒரு கிலோ தக்காளி 24 ஆம் தேதி 60 ரூபாய்க்கு எகிறியது.

இதேபோல வெங்காயம், உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிட்டது.

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பெண்கள், ஆண்கள் தங்கள் பெற்றோர்களுக்கு புயல் எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது எந்தத் திசையில் நகர்கிறது என்பதையும் நேரடி வர்ணனை போல வெதர்மேன் ரிப்போர்ட்டைப் பார்த்து எச்சரிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் சொல்வதை விட அனுபவம் சொல்வதன் வீச்சு அதிகமாக இருக்கிறது என்பதையே மக்களின் இந்த விழிப்புணர்வு காட்டுகிறது.

You may also like
வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
டிசம்பர் 4 இல் பாம்பன் இடையே ‘புரெவி’ புயல் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

Leave a Reply