Home > செய்திகள் > கனிமொழிக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டது – ப.சிதம்பரம்

கனிமொழிக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டது – ப.சிதம்பரம்

கனிமொழிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குரலெழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று சென்ற மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி, நீங்கள் இந்தியரா எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த அதிகாரியிடம் தனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் எனத் தெரிவித்ததாகவும், அதற்கு தன்னை இந்தியரா எனக் கேட்டதாகவும் குறிப்பிட்ட கனிமொழி, இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போது உருவானது எனவும் கேள்வி எழுப்பினார்.இதற்கு மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பலர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது தங்களின் கொள்கை அல்ல எனவும் சிஐஎஸ்எஃப் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தனக்கும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இன்று (ஆகஸ்ட் 10) தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழிக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவம் அசாதாரணமானது அல்ல. கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தி தெரியாத மத்திய அரசு ஊழியர்கள் விரைவாக இந்தி கற்றுக்கொள்ளும்போது, மத்திய அரசு பதவிகளில் இந்தி பேசும் நபர்கள் ஏன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாது என்று கேள்வி எழுப்பிய அவர், “மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்

You may also like
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
உழைப்போர் கையில் பொறுப்பு – திமுக தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!
அகமது முகமதில்…முகமது? கண்ணாடி ஒரு ரசாவாதி ! அலாவுதீன் அற்புத விளக்கு போல்…. பிம்பம் உரச உரச… ரசம் கூடும்
விவசாயிகளுக்காகப் போராடும் இயக்கம்தான் திமுக- கனிமொழி

Leave a Reply