Home > செய்திகள் > போராடும் விவசாயிகளுடன் இணைந்து மத்திய அரசு குழு அமைக்க நீதிபதி அறிவுறுத்தல்

போராடும் விவசாயிகளுடன் இணைந்து மத்திய அரசு குழு அமைக்க நீதிபதி அறிவுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அகற்றக் கோரி டெல்லிவாசிகள் சிலர் பெயரில் தொடரப்பட்ட வழக்கு நேற்று ( டிசம்பர் 17ஆம் தேதி )உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனல் பறக்கும்விவாதம் நடைபெற்றது.

நேற்று பகல் 12.41 மணிக்கு விசாரணை தொடங்கியது. உத்தரப் பிரதேசம், ஹரியானா பாஜக அரசுகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜரானார்.

பஞ்சாப் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜரானார். அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மத்திய அரசின் சார்பில் ஆஜரானார்.

இந்த வழக்கில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், வழக்கறிஞர் துஷ்யந்த் திவாரி ஆஜராகி, “இந்த வழக்கில் பாரதிய கிசான் யூனியன்” இம்பிலீட் (தானும் எதிர்மனுதாரராக) சேர்ந்துகொள்கிறது என்று தெரிவித்தார்.

சால்வே வாதாடுகையில், மனுதாரர் டெல்லியில் வசிப்பவர். விவசாயிகளின் போராட்டம் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தைக் குறைப்பதோடு, பொருட்களின் விலையையும் உயர்த்திவிட்டிருக்கிறது.

டெல்லிக்குத் தினந்தோறும் பழங்கள், காய்கறிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களிலிருந்து வருகின்றன. இந்தப் போராட்டத்தால் அவற்றின் விலைகள் உயர்ந்திருக்கின்றன” என்றார்.

அப்போது தலைமை நீதிபதி போப்டே, “நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறோம். போராடுவதற்கான அடிப்படை உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் அது இன்னொருவரின் வாழ்க்கையில் சேதத்தை ஏற்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டார்.

அப்போது சால்வே, எந்த உரிமையும் முழுமையானது, சுதந்திரமான பேச்சுரிமை கூட இல்லை. சுதந்திரமான பேச்சுரிமை என்பது மூடிய சினிமா தியேட்டரில் கத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. உரிமைகளை மறுக்கச் சொல்லவில்லை. கட்டுப்படுத்தச் சொல்கிறேன். எல்லா உரிமைகளும் வரம்புகளைக் கொண்டுள்ளன.

கொரோனா காலத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வருகிறார்கள் என்றால், எனது வாழும் உரிமைக்கு இடையூறு செய்கிறார்கள்.

விவசாயிகள் சங்கமும் ஒருவகையில் அரசியல் கட்சி போன்றது தான். பெரிய கூட்டத்தைத் திரட்டும் சங்கம் அத்தகைய கூட்டத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொருட்கள் விலை உயர்வதற்கு யார் காரணம்?என்று வாதிட்டார்.

தலைமை நீதிபதி போப்டே, விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். நாங்கள் அதில் தலையிட மாட்டோம். ஆனால், எதிர்ப்பின் விதத்தையும் கவனிக்க வேண்டும். எதிர்ப்பின் முறையை எந்த வகையில் மாற்ற முடியும் என்று மத்திய அரசிடம் கேட்போம் என்று கூறினார்.

தொடர்ந்து சால்வே, கூட்டத்தில் இருக்கும் எல்லாரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நான் அரசுக்கு வரி செலுத்துகிறேன்.

போராட்டக்காரர்கள் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும்போது எனது வரிப்பணமும் வீணாகிறது. போராடுகிறவர்கள் இந்த சேதங்களுக்கு தாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று அறிவிக்க வேண்டும்என்றார்.

தலைமை நீதிபதி போப்டே, பொதுச் சொத்துகளை சேதம் ஏற்படாமல் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படாத வரை போராட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது.

போராட்டத்துக்கு ஒரு குறிக்கோள் உள்ளது. அதேநேரம் சாலையில் உட்கார்ந்திருப்பதால் மட்டுமே நோக்கத்தை அடைய முடியாது. மத்திய அரசும் விவசாயிகளும் பேச வேண்டும். நீதிமன்றம் அதை எளிதாக்கும்.

பக்கச்சார்பற்ற மற்றும் சுயேட்சையான குழு பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். இந்த குழுவில் பி.சாய்நாத், பாரதிய கிசான் யூனியன் போன்றவர்கள் இருக்கலாம் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “இந்தச் சட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள் ஆம் அல்லது இல்லை என்று சொல்லச் சொல்லி போராடுகிறார்கள்” என்றார்.

தலைமை நீதிபதி குறுக்கிட்டு, உங்கள் முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. குழு முடிவு செய்யட்டும். நீங்கள் பேச்சுவார்த்தையில் வெற்றிபெறவில்லை என்பதை நாங்கள் கவனித்தோம் என்றார்.

பஞ்சாப் அரசுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், இந்தப் போராட்டத்தில் பங்குபெறும் ஏராளமான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள். நீதிமன்றம் கூறியது போல ஒரு குழு அமைக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

குழுவில் யார் இருப்பார்கள் என்பதை விவசாயிகளும் மத்திய அரசும் உடன்பட வேண்டும். ஜனநாயகத்தின் உரிமைகள் பற்றி சால்வே வாதிட்டதில் எனக்கு தீவிர கருத்து மாறுபாடு உள்ளது. வியன்னா மற்றும் ஹாங்காங்கில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும்.

சாலைகளைத் தடுத்தது விவசாயிகள் என்று கூறுகிறார்கள். விவசாயிகளை டெல்லிக்குள் நுழைவதைத் தடுத்தது யார்? சாலையில் முள் கம்பிகள், இரும்பு சுவர்கள் போட்டு தடுத்தது யார்? போலீஸார்தான் தடுத்திருக்கிறார்கள்.

விவசாயிகள் டெல்லிக்கு வரவே விரும்புகிறார்கள். சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறார்கள் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, எந்த கும்பல் வன்முறையாக மாறும் என்பதை நீதிமன்றத்தால் கணிக்க முடியாது. காவல் துறையினரால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

ஒருவரின் வாழ்க்கையையோ, சொத்தையோ நாம் பாதிக்க முடியாது. போராடுவதற்கான இந்த உரிமை வேறொருவரின் உரிமையைப் பறிக்க முடியாது என்று சால்வே வாதிட்டார்என்று தெரிவித்தார்.

அப்போது ப.சிதம்பரம், அவர்கள் ஒரு கும்பல் அல்ல. விவசாயிகளின் பெரிய குழு என்று பதிலளித்தார்.

உடனே தலைமை நீதிபதி, மாறுபட்ட அர்த்தத்தில் நாங்கள் அவர்களை ஒரு கும்பல் என்று அழைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

சிதம்பரம் தொடர்ந்து, “காவல் துறை சாலையைத் தடுத்துவிட்டு, பின்னர் விவசாயிகள் அதைத் தடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் டெல்லியில் நுழைய விரும்புகிறார்கள்.

நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்தச் சட்டங்களில் திருத்தம் பற்றி விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

வாதங்களைக் கேட்டு முடித்த நீதிபதிகள். விவசாயிகளின் போராட்டத்தைக் கேள்விக்கு உட்படுத்துவது தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.

போராட்டம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. அதேநேரம் இந்த அடிப்படை உரிமையைச் செயல்படுத்தும்விதம் பொது ஒழுங்குக்கு மாறாக அமையக் கூடாது என்பதையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.

எனவே விவசாயிகளின் போராட்டம் ஒழுங்கீனங்கள் ஏதுமின்றி தொடரலாம். இந்தப் போராட்டத்தின் மூலம் பொது அமைதிக்கு கேடு விளைவிப்பதை விவசாயிகள் காவல்துறையினர் இரு தரப்பினரும் தவிர்க்க வேண்டும்.

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசும் இணைந்து ஒரு குழு அமைக்க நீதிமன்றம் பரிந்துரை செய்கிறதுஎனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

Leave a Reply