கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்து தனியார் மருத்துவமனை ஒன்று 8 லட்சம் ரூபாய் வசூலித்தது தொடர்பாகச் சுகாதாரத் துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் அதே வேளையில் மருத்துவமனைகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழக அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்தது.
இதில் அதிகபட்ச கட்டணமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்று தங்களிடம் சிகிச்சை பெற்ற தம்பதியினரிடம் கொரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிவித்து 8 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை ராஜாமில் பகுதியைச் சேர்ந்த நேரு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், நானும் என் மனைவியும் காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக, வைத்தியநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், மருத்துவர் ராஜ்குமார் என்பவரிடம் சிகிச்சைக்காகச் சென்றோம். கடந்த ஜூலை 7ஆம் தேதி சிகிச்சைக்குச் சென்றபோது இருவருக்கும் வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாகத் தெரிவித்து அதற்காகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முன்பணமாக 8 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
இந்நிலையில் கொரோனா தொற்றின் மீதான அச்சம் காரணமாக, ஐந்து லட்சம் ரூபாய் பணமாகவும் மூன்று லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்தினோம்.
இதனிடையே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் இருவருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இரு நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் ஜூலை 10 ஆம் தேதி இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோம்.
அப்போது முன்பணமாகச் செலுத்திய தொகையில் சிகிச்சைக்கான கட்டணத்தை எடுத்துக் கொண்டு மீதி தொகையைத் தருமாறு கேட்டதற்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது.
அப்போது ரசீது கேட்டதற்கு 65 ஆயிரத்து 840 ரூபாய்க்கு மட்டுமே இருவரது பெயரிலும் ரசீது வழங்கினர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொரோனா காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.
எனவே மதுரை வைத்தியநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தாங்கள் செலுத்திய தொகையை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்
இந்த மனு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் , இயக்குனர் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.