Home > செய்திகள் > நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை – முதல்வர் இரங்கல்

நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை – முதல்வர் இரங்கல்

தமிழகத்தில் நீட் தேர்வுக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று தெரிவித்து, தமிழகத்துக்கு விலக்களிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்த சூழலில் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ் மற்றும் தற்போது மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா என மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், மறைந்த ஜோதி ஸ்ரீ துர்காவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருக சுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதி ஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜோதி ஸ்ரீ துர்காவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், “ மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீத முடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனம் தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply