Home > செய்திகள் > பெரியார் பிறந்தநாளில் கலைஞர் சிலை திறந்துவைத்த மு.க.ஸ்டாலின்

பெரியார் பிறந்தநாளில் கலைஞர் சிலை திறந்துவைத்த மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியார் பிறந்தநாளான நேற்று நெய்வேலி நகரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்துவைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கலைஞர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவருக்குச் சிலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் கலைஞர் சிலையை நிறுவ எம்.எல்.ஏ சபா.இராஜேந்திரன், திமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், திட்டக்குடி எம்.எல்.ஏ.வுமான வெ.கணேசனும் என்.எல்.சி தொமுச நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தனர்.

கட்சி சார்பாகச் சிலைவைக்க என்.எல்.சி. நிறுவனம் அனுமதி கொடுக்க மாட்டார்கள், தொழிற்சங்கம் சார்பாக சிலை வைக்க அனுமதி கொடுப்பார்கள் என்று சட்ட வல்லுநர்கள் ஆலோசனை கூறினர். அதன்படி, என்.எல்.சி அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று, கருணாநிதி உருவச் சிலையைச் செய்வதற்கு, மாமல்லபுரம் நாகப்பா ஜெகநாதன் சிற்பியிடம் ஒன்பது அடியில் சிலையைச் செய்ய சொல்லி ஆர்டர் கொடுக்கப்பட்டது. சிற்பிகள் ஒரே கல்லில் ஒன்பது அடி உயரத்தில் கருணாநிதியின் உருவச் சிலையை சுமார் 95 நாட்கள் செதுக்கி வடித்தனர். இந்த நிலையில் பெரியார் பிறந்த நாளான நேற்று (செப்டம்பர் 17) நெய்வேலி தொமுச ரவுண்டாணாவில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையைக் காணொலி மூலமாகத் திறந்துவைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் குருநாதன் கூறுகையில், “என்.எல்.சியில் தொமுச உறுப்பினர்கள் 4,816 பேர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து சந்தா பணமாக மாதம் மாதம் ரூ.50 வசூலித்து வருகிறோம். சேமிப்புப் பணத்தில் 9.75 லட்சம் ரூபாயை எடுத்து 450 கிலோ எடை, ஒன்பது அடி உயரத்தில் சிலையை அமைத்து, பத்து அடி உயரம் பீடத்தில் வைத்துள்ளோம்” என்றார்.

நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா.இராஜேந்திரன் கூறுகையில், “கடலூர் மாவட்டத்திலேயே மிக உயரமான சிலையாக இருக்க வேண்டும், அதுவும் அண்ணா சாலையில் அண்ணாவைப் பார்த்தமாதிரி அமைய வேண்டும் என்று என்.எல்.சி அதிகாரிகளிடம் போராடி இடத்தை வாங்கினோம். காரணம், மத்திய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் அண்ணா சிலை மேற்கு திசையைப் பார்த்த வண்ணம் உள்ளது. கலைஞர் கிழக்கு திசையைப் பார்த்த மாதிரியும், குறிப்பாகச் சூரியன் உதிப்பதைத் தினந்தோறும் கலைஞர் பார்த்த மாதிரி அமைய வேண்டும் என்று பல நாட்களாக யோசனை செய்து சிலை வைத்துள்ளோம்” என்றார்.

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

Leave a Reply