கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றம் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அக்டோபர் 1ஆம் தேதி முடிவடைகிறது.
சமூக இடைவெளியுடன் கூடிய கூட்டத்தொடராக நடைபெறும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு 16 சட்ட திருத்தங்கள் நான்கு புதிய சட்ட மசோதாக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா தொற்று, புலம்பெயர் தொழிலாளர்கள், சீன எல்லைப் பிரச்சினை, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை வழங்காமை, இந்தியாவின் ஜிடிபி பாதாளத்திற்கு சென்றது ஆகியவை பற்றியும் மற்றும் பல மக்கள் பிரச்சினைகள் பற்றியும் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஆனால் இந்த கூட்டத்தொடரில் அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்கும் கேள்வி நேரத்தை ரத்து செய்திருப்பதாக ராஜ்யசபா செயலகத்தை மேற்கோள்காட்டி ஏ. என்.ஐ. செய்தி நிறுவனம் இன்று
( செப்டம்பர் 2)செய்தி வெளியிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் பிரைன் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு பதினைந்து நாட்கள் முன்னதாகவே எம்.பி.க்களிடமிருந்து கேள்விகள் பெறப்படும்.
ஆனால் இந்த முறை 1950 ஆம் ஆண்டிலிருந்து முதல்முறையாக கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெரிகிறது.
பெரும் தொற்றை காரணம் காட்டி ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்படுவதை மன்னிக்க முடியாது. எதிர்க் கட்சி எம்பிக்கள் தாங்கள் கேள்வி கேட்கும் உரிமை பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்