Home > செய்திகள் > பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி- முதல்வர் அறிவிப்பு

பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி- முதல்வர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் திறந்தவெளி கூட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மார்ச் 15ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று குறையக் குறைய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன.

திமுக தரப்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்கள்.

உதயநிதி திறந்த வேன் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனால் திமுகவின் பெரும்பாலான பிரச்சாரக் கூட்டங்கள் அரங்க நிகழ்வாகவே நடைபெறுகிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திறந்த வேனில் பேசாமல், அரங்கக் கூட்டங்களில்தான் பேசி வருகிறார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில்,

“உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி,

திறந்தவெளியின் அளவுக்கேற்ப தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவீத அளவுக்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது” என்று அறிவித்தார்.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்ற முதல்வர்,
“பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், தனிமனித இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்தும்,

அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply