Home > செய்திகள் > கொரானா தடுப்பூசி தீவிரசோதனைக்கு பின்பே பயன்பாட்டுக்கு அனுமதி- ஆனந்த் சர்மா

கொரானா தடுப்பூசி தீவிரசோதனைக்கு பின்பே பயன்பாட்டுக்கு அனுமதி- ஆனந்த் சர்மா

கொரோனாவுக்கு எதிரான பல்வேறு தடுப்பூசிகள் இந்தியாவில் பரிசோதனையில் இருக்கின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகளில் சில தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளிலும் உள்ளன.

இவற்றில் பாரத் பயோடெக், சீரம் நிறுவனம் மற்றும் பைசர் நிறுவனங்களின் தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்களை மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ.) பரிசீலித்து வருகிறது.ஆனால் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசுக்கு உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான இந்த குழு, இது தொடர்பாக மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த காலங்களில் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு சி.டி.எஸ்.சி.ஓ. அனுமதி அளித்தது இல்லை. எனவே தகுந்த பரிசீலனைக்கு பின்னரே அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னர், தேவையான அனைத்து நோக்கங்கள், தேவைகள் அனைத்தையும் தடுப்பூசிகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் அனைத்து கட்ட பரிசோதனைகளையும் முடித்திருக்க வேண்டும்.

குறிப்பாக போதுமான அளவு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். அந்தவகையில் விலங்குகள், மனிதர்களிடம் போதுமான மாதிரிகளை செலுத்தி சோதித்து இருக்க வேண்டும்.

அப்படி அவசர அங்கீகாரம் வழங்கப்பட்டால், அது முறையான கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் வழங்க வேண்டும். அதே நேரம் இந்த விதி அரிதான நிகழ்வுகளில் மட்டுமே பின்பற்ற வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் அணுக முடியாதவை அல்லது மலிவானவை அல்லாமல் இருப்பதால் தொற்று நோய்களின்போது விரிவான சுகாதார சேவையின் பெரும்பகுதியை அரசு ஆஸ்பத்திரிகள் தான் கொண்டிருக்கின்றன.

எனவே பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தொற்று நோய்களை சரியான முறையில் கையாளுவதற்கு இந்த மருத்துவமனைகள் தகவமைத்துக்கொள்ள முடியும்.

கள்ளச்சந்தையில் மருந்துகள் விற்பனை மற்றும் மருந்துகளின் தரத்தை சரிபார்த்தலில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த தொற்று நோயில் இருந்து கற்ற அனுபவங்களின் அடிப்படையில் தேசிய அளவில் விரிவான சட்டம் இயற்றுதல் அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது 

Leave a Reply