Home > செய்திகள் > நித்தியானந்தாவை நெருங்கும் காவல்துறை

நித்தியானந்தாவை நெருங்கும் காவல்துறை

பாலியல் கொடுமை, கொலை வழக்கு, சிறுமிகள் கடத்தல், அமலாக்கத் துறை வழக்கு என அடுக்கடுக்கான புகார்களுக்கு ஆளான சர்ச்சை சாமியார் நித்யானந்தா, தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, அதற்கு ரிசர்வ் வங்கி, பல்கலைக் கழகங்கள், கைலாசா டாலர் என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

ஒரு இந்தியப் பிரஜையான நித்தி, குற்ற வழக்குகளில் சிக்கி, 50க்கும் மேற்பட்ட விசாரணைகளுக்கு ஆஜராகாமல் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தற்போது எங்கிருக்கிறார் என்பதே அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது.

ஆனால் தனக்கென்ன கவலை என்ற வகையில், தினசரி வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா ஒரு பதிவில், தான் திருவண்ணாமலையில் சிசிடிவிகளை வைத்து அண்ணாமலையாரைத் தரிசித்து வருவதாகவும், ஆனால் அந்த சிசிடிவி சிக்னலை வைத்து என்னைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் சவால் விடும் வகையில் பேசியிருந்தார்.

இந்நிலையில், நித்யானந்தா வெளியிட்டு வரும் லைவ் வீடியோக்கள் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றின் மூலம் கூட அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லையா என அவரை தேடும் விசாரணை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது 2018ல் ஜூன் மாதத்திலேயே நித்யானந்தா நாட்டை விட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், நித்யானந்தா வெப் டிவி, ஃபேஸ்புக் லைவ், கைலாசா யூட்டியூப் சேனல் ஆகியவற்றில் எங்கிருந்து வீடியோவை பதிவேற்றம் செய்கிறார் என்று கர்நாடக சிஐடி போலீஸ் 2019ல் விசாரணையைத் தொடங்கியது.

மேற்குறிப்பிட்ட சமூக வலைதள பக்கத்தில் வீடியோ அப்லோட் செய்வது குறித்து விசாரித்ததில் பிடதி ஆசிரமத்தின் ஐபி முகவரியில் இருந்தும், குஜராத்தில் இருக்கும் சில ஐபி முகவரியிலிருந்தும் அப்லோட் செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், இது உண்மை அல்ல.

எனவே விசாரணையைத் தீவிரப் படுத்திய நிலையில், பல ஏமாற்று வேலை நடைபெறுவது, தவறான முகவரிகளை நித்தி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

பொதுவாக சமூக ஊடகங்களில் ஓரிடத்திலிருந்து வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டால், எங்கிருந்து வீடியோ பதிவேற்றம் செய்யப்படுகிறது என ஐபி முகவரி மூலம் கண்டுபிடித்து விட முடியும்.

ஆனால் நித்தியின் வீடியோ ஐபி முகவரிகளைக் கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம் சர்வதேச ஐடி துறை வல்லுநர்கள் பொறியாளர்கள் என ஹை டெக் டீம்களை வைத்துக் கொண்டு நித்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்.

உதாரணமாக, தொலைக்காட்சிகளில் நேரலை விவாதங்களின் போது பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேசுபவர்களை, ஒருங்கிணைக்க எடிட்டிங் ரூமிலிருந்து மிக்சர் மிசின் பயன்படுத்துவார்கள்.

அதன் மூலமாக எத்தனை லைவ் கேமராக்களை வேண்டுமானாலும் இணைத்து ஒரே ஸ்க்ரீனில் அனைவரையும் காண்பிக்க முடியும். அல்லது குறிப்பிட்ட நபரை மட்டும் காண்பிக்க முடியும்.

இதன் மூலம் பல்வேறு இடங்களிலிருந்தும் பேசுவதால் பல்வேறு ஐபி முகவரிகள் காண்பிக்கும். அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெங்களூரு பிடதியிலிருந்தும், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரமத்திலிருந்தும், தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் மற்றும் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளிலிருந்தும் நித்தி மற்றும் அவரது சீடர்கள் ஒரே நேரத்தில் கான்பிரன்ஸ் மூலம் லைவ் சொற்பொழிவுகள் ஆற்றுகின்றனர். இதில் பல்வேறு நாடுகளின் ஐபி முகவரிகள் இருப்பதால் நித்தியின் ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சவாலாக இருக்கிறது.

ஒருவேளை இதிலும் இண்டர்போல் தன்னை கண்டுபிடித்துவிடுவார்கள் என்று பயந்த நித்தி கற்பனைக்கும் எட்டாத வகையில், அதிநவீன தொழில் நுட்பமான ஹோலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார் என்பது தெரியவந்தது.

திரையில் தோன்றுவது பொய்யான தோற்றம் என தெரிந்தாலும் அதை உண்மை என மூளையை நம்ப வைப்பதற்காக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் ஹோலோகிராமும் பயன்படுத்தப்படுகிறது.

இல்லாத ஒரு பிம்பத்தைத் திரையின் மூலமாக உருவாக்க ஹோலோகிராம் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக ஒருவரை உங்கள் முன்னால் இருப்பது போன்று மாய தோற்றத்தை உருவாக்கலாம்.

ஹோலோகிராம் தொழில்நுட்ப கேமரா மூலம் நித்யானந்தா பேசுவது கைலாசாவிலிருந்து, பெங்களூரு பிடதி, அமெரிக்கா போன்ற அவரது ஆசிரமங்களில் சிம்மாசனத்திலேயே அமர்ந்து பேசுவது போல் காண்பிக்கப்படும்.

இதை தான் லைவ் வீடியோவாக நித்தி சீடர்கள், மிக்சர் மிசின் மூலம் சமூக வலைதளங்களில் ஒளிபரப்புகிறார்கள்.

இதுமட்டும் அல்லாமல் நித்தி கைலாசாவில் ஐபி முகவரியை மறைப்பதற்காக HIDE IP என்ற சர்வதேச கிரிமினல்கள் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி, தன்னுடைய இருப்பிடத்தை மறைத்துக்கொண்டு பேசி வருகிறார்.

ஆனால் இதை அனைத்தையும் கர்நாடக சிஐடி போலீஸும், குஜராத் போலீஸும், அமலாக்கத்துறையும், இண்டர்போலும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் விசாரணை வட்டாரங்களில்.

தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நம்பிக்கொண்டு, மீனாட்சி மீனாட்சி என்னாச்சி என்னாச்சி, மீம்ஸ் போடும் மாம்ஸ்களா என தனது கிண்டல் பேச்சில் அனைவரது கவனத்தையும் திசை திருப்பி வரும் நித்தி விரைவில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like
மணல் கடத்தியவரைத் தடுத்த போலீசார்: தப்பியோடியபோது கிணற்றில் விழுந்து பலி
நிவர் புயல் கட்டுபாட்டில் சென்னை களமிறங்கிய காவல்துறை
மனைவியை அடித்துத் துவைக்கும் ம.பி. போலிஸ் அதிகாரி
ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு? காவல்துறைக்கு எச்சரிக்கை

Leave a Reply