Home > செய்திகள் > ஸ்டெர்லைட் ஆலை நீதிமன்ற உத்தரவு பற்றி அரசியல் கட்சி தலைவர்கள்

ஸ்டெர்லைட் ஆலை நீதிமன்ற உத்தரவு பற்றி அரசியல் கட்சி தலைவர்கள்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது, ஆலையை மூடி சீல் வைத்த அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 18) தீர்ப்பு வழங்கியது.

இயற்கையை அதிக அளவு மாசுபடுத்தும் ஆலையால் கிடைக்கும் பொருளாதார நிலையை விட சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே முக்கியம் என்று இந்த தீர்ப்பின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்புக்குத் தூத்துக்குடி பகுதி மக்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ, “சட்டப் போராட்டத்தை தொடருவோம்” என்று கூறியுள்ளார். மேலும், “25 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி ஸ்டெர்லைட் இயங்கி வந்தது. தற்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாக இது உள்ளது. ஆலையைச் சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரத்தை இறக்குமதி செய்வது நாட்டிற்கே பெரிய இழப்பாகும். இரண்டரை ஆண்டுகளாகத் தொழிற்சாலை மூடப்பட்டாலும் வேலை வாய்ப்பை பாதுகாத்து வந்தோம்.

இனி தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வது சவாலான விஷயம். ஆலை மூடப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தீர்ப்பின் முழு விவரம் தெரிந்தபின் சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்” என்ற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என கூறியுள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறேன் என கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது“13 பேர் சிந்திய ரத்தம், அவர்களின் உயிர்த் தியாகம் நீதியைக் காப்பாற்றி உள்ளது. ஆனால் அவர்களை மனித வேட்டையாடிய காவல்துறையினர் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, அந்தப் படுகொலைக்கு மாநில அரசே முழு காரணம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இப்போதாவது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினரை பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

இந்த வழக்கும் தமிழ்நாடு அரசு காவல்துறையிடமிருந்து மாற்றப்பட்டு, மத்திய குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை.இந்தப் படுகொலை குறித்து மக்கள் கண்காணிப்பகம் நிர்வாகச் செயலாளர் ஹென்றி திபேன் அவர்கள் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைக் காவல் அதிகாரிகளையும், தடயவியல் நிபுணர்களையும் கொண்டு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து 2400 பக்க அறிக்கையை மனித உரிமை ஆணையத்திலும் தாக்கல் செய்துள்ளனர்.மக்கள் உள்ளம் எரிமலையானதைக் கண்டு, தன்னுடைய நிலைப்பாட்டைத் தமிழக அரசு மாற்றிக்கொண்டு, நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர் நிலை எடுத்தது.

சுற்றுச் சூழலைப் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எந்தச் சூழலிலும் அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சரவையைக் கூட்டி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. கொள்கை முடிவாக அறிவிக்கவும் இல்லை. இப்போதாவது தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, அம்மாதிரியான கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.இந்த தீர்ப்பில், “ஆட்சி மாறினாலும் காட்சி மாறினாலும் கடந்த 20 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து துளியளவும் சமரசம் செய்து கொள்ளாமல் போராடியவர் வைகோ” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டது என்பதாலேயே, அந்த ஆலைக்கு எதிரான மக்களின் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமல்ல. கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழக அரசும், சென்னை உயர் நீதிமன்றமும் தடை விதித்த போதெல்லாம், உச்ச நீதிமன்றத்தை அணுகி அந்த தடையை ஸ்டெர்லைட் தகர்த்தது மறக்கக்கூடாத வரலாறு ஆகும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அங்கு மிகவும் வலிமையான வாதங்களை முன்வைத்து, அழிவை ஏற்படுத்தும் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதையும், ஆலையின் கட்டமைப்புகள் அகற்றப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். என கூறியுள்ளார் பாமக ராமதாஸ்

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக்கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும்.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்குத் தடை தொடரும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் என கூறியுள்ளார் விஜயகாந்த்

அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறுகிறபோது ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகிறபோது சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பித்திருப்பது அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை நிரந்தரமாக்குகிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கையில் ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகிலிருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.

இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்

You may also like
சீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு?
தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!
உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!
திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!

Leave a Reply