இந்தியாவில் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.
இன்று கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனும், நாளை பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
கொரோனா பரவலில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை. கொரோனா தொற்று பரவலுக்கு முன்னரே இந்தியா முன்னெச்சரிக்கையாக இருந்தது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயம், சிறு குறு தொழில்கள், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் மீண்டும் வேகமடைய நாம் இணைந்து போராட வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
இவ்வாறு மோடி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.