Home > அரசியல் > துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆடிய ருத்ரதாண்டவம்

துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆடிய ருத்ரதாண்டவம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையிலான அதிகார, அரசியல் மோதலின் அடுத்த கட்டம் பொதுவெளிக்கு வந்திருக்கிறது.

அதிமுகவின் அடுத்த முதல்வரை அடுத்து அமையப் போகும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சில நாட்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி கொடுக்க, இதற்கு பதில் அளிக்கும் வகையில், ‘என்றும் எடப்பாடியாரே முதல்வர்’ என்று ட்விட் போட்டார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

இந்த மோதல் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில்தான் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கொடியேற்றினார். விழா முடிந்ததும் ஓ. பன்னீர் செல்வம் அவரிடம் நேரடியாகவே, ‘கட்சிய கெடுக்குற மாதிரி சில பேரு பேசிக்கிட்டிருக்காங்க. இதப் பத்தி நாம நடவடிக்கை எடுத்தாகணும்’ என்று சொல்லியிருக்கிறார். முதல்வரும் இதுபற்றி பேசுவோம் என்று அவரிடம் பதிலளித்துள்ளார்.

இதற்கிடையேதான் தேனியில் 2021 இன் முதல்வர் ஓபிஎஸ் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் ஊடகங்களில் வர ஆரம்பித்தன. இந்தத் தகவல் வந்தபோதே தலைமைச் செயலகத்தில் முதல்வரும் துணை முதல்வரும் பேசிக் கொண்டபடி…. பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கிரீன் வேஸ் சாலையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குச் சென்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.வீரமணி, பெஞ்சமின் ஆகியோர் தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிவிட்டு அதையடுத்து ஓ. பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு சென்றனர். தகவல் கிடைத்து பன்னீர் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் சென்றார்,

அங்கே அனைத்து அமைச்சர்களுக்கும் யாருக்கு மோர், யாருக்கு காபி, யாருக்கு டீ என்று கொடுத்து உபசரித்தார் துணை முதல்வர். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தவர் பிறகு திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி. காமராஜ், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோரை தனியாக இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.முதலில் பேச்சைத் தொடங்கியிருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். ‘அண்ணே நமக்கெல்லாம் வயசாகிப் போச்சு.

இனிமே என்ன நடந்தாலும் கட்சிதான் எனக்கு முக்கியம். இனிமே எனக்கு சீட் கிடைச்சாலும் சரி கிடைக்காட்டியும் சரி… சாகுற வரைக்கும் நமக்கு இந்தக் கட்சிதாண்ணே… நாம எல்லாரும் ஒத்துமையா இருப்போம்ணே…’ என்று சொல்ல குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், ‘இப்ப ஒத்துமையாதானே இருக்கோம்.

அடுத்து நம்ம ஆட்சிதான் வரணும்னுதான் நானும் நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா நீங்க எல்லாரும் என்ன நினைக்கிறீங்கனு தெரியலையே?” என்று கேட்டிருக்கிறார்.அமைச்சர்கள் என்ன ஏதென கேட்க, “ஒரு ஆட்சி நல்ல விதமா நடந்துக்கிட்டிருக்கு. நான் அப்போலேந்து சொல்லிட்டு வர்றேன். ஆட்சி அளவுக்கு கட்சியும் முக்கியம். அப்பதான் அடுத்தும் ஆட்சியை பிடிக்க முடியும்.

ஆனா ஒவ்வொருத்தரும் பேசுற பேச்செல்லாம் கேட்டா கட்சிக்கு நல்லது பண்றது மாதிரி தெரியலையே. அவங்கவங்க உயரத்துக்கு ஏத்த மாதிரி சிலர் பேச மாட்டேங்குறாங்களே. ஆளாளுக்கு போஸ்டர்லாம் ஆரம்பிச்சது யாருங்க? (வேண்டும் எடப்பாடியார்… மீண்டும் எடப்பாடியார் என்ற போஸ்டர் நெல்லையில் பதினைந்து நாட்கள் முன்பு ஒட்டப்பட்டிருக்கிறது என்பதை ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே தகவல் சேகரித்து எடப்பாடிக்கும் அனுப்பியிருக்கிறது)

இன்னிக்கு தேனியில ஒட்டின போஸ்டரை நானே கிழிக்கச் சொன்னேனே…காலையிலயே சையதுகானுக்கு போன் போட்டு கண்டிச்சேனே… இதே பொறுப்பு எல்லாருக்கும் இருக்கணுமா இல்லையா?அந்த அமைச்சரு அமைச்சர் மாதிரியா பேசுறாரு? மதுரையில பேட்டி கொடுக்குறாரு, விருதுநகர்ல பேட்டி கொடுக்குறாரு.

ஒரு மாசமா சொல்லிக்கிட்டிருக்காரு. அவர் ஒருங்கிணைப்பாளரா, நான் ஒருங்கிணைப்பாளரானு கேட்டு சொல்லுங்க. நான் கட்சியை சுமுகமா கொண்டுபோகணும்னு பொறுமையா இருந்தேன். சரி… இதுக்கு மேலயும் ஒண்ணும் சொல்லாம இருக்கக் கூடாதுனு ட்விட்டர்ல நாசுக்கா அறிவுரை சொன்னேன். எனக்கு கட்சிதான் முக்கியம்.

ஆனா…. ஆட்சிதான் முக்கியம், கட்சிய கெடுத்துடலாம்னு முடிவு பண்ணிங்கன்னா அவங்கவங்க முடிவெடுக்க வேண்டிவரும்’ என்று எகிறிவிட்டார் ஓ.பன்னீர் செல்வம்.இதன் பிறகுதான் அமைச்சர்கள் எல்லாம் அங்கிருந்து வேகவேகமாக ஓடி எடப்பாடி பழனிசாமியை பார்த்திருக்கிறார்கள்.

அதன் பிறகுதான் யாரும் எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது என்று ஓர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

You may also like
தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!
மோடியின் புல்லட் புரூஃப் காரை தளபதி ஏற்கக் கூடாது! – Athanurchozhan
புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN
தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!

Leave a Reply