டெல்லியில் போராட்ட களத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்களை வீட்டுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கோரிக்கையை விவசாய தலைவர்கள் நிராகரித்தனர்.
டெல்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விவசாய தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று 5வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது போராட்ட பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்களை தயவு செய்து வீட்டுக்கு செல்லுமாறு உங்கள் அனைவரையும் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் என்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை விவசாய தலைவர்கள் நிராகரித்து விட்டனர். விவசாய தலைவர்கள் கூறியதாவது: எங்களிடம் ஒரு ஆண்டுக்கு தேவையான பொருட்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக நாங்கள் சாலையில் இருக்கிறோம்.
நாங்கள் சாலையில் இருக்க வேண்டும் என்று அரசு விரும்பினால், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் வன்முறை பாதையை தேர்ந்தெடுக்கமாட்டோம்.
போராட்ட களத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உளவு பிரிவு உங்களுக்கு சொல்லும். எங்களுக்கு கார்ப்பரேட் விவசாயம் தேவையில்லை.
இந்த சட்டத்தால் அரசுதான் பலன் அடையும், விவசாயிகள் அல்ல. எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூட்டத்திலிருந்து வெளியேறுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.