சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இரட்டை கொலை வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதுபோன்று சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூலை 7ஆம் தேதி தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜூலை 24ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு காவலர் பால்துரைக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, பால்துரையின் மனைவி மங்கையர்திலகம், தனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அதில் சர்க்கரை நோய் மற்றும் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தன் கணவருக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் சரியான கவனிப்பும், சிகிச்சையும் வழங்கப்படவில்லை. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும். எனவே அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 10 அதிகாலை 2.30 மணியளவில், பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.