Home > செய்திகள் > நிதியுதவி முறைகேட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் – தமிழக முதல்வர்

நிதியுதவி முறைகேட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் – தமிழக முதல்வர்

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் தொகையில் நடந்த முறைகேடுகள் பற்றி ஒவ்வொரு மாவட்டமாக விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கிசான் திட்டம் என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் தலைமைச் செயலாளரிடமும் பாஜக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

போலியான விவசாயிகளின் பெயரில் ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்காக ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கோருகிறது.

திமுகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.இந்த நிலையில் மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டத்துக்காக திருவண்ணாமலைக்கு நேற்று (செப்டம்பர் 9) வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே ரூ.52 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற 31 திட்ட பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை பால்வளத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.19 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 11 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், பல்வேறு துறைகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 18,279 பயனாளிகளுக்கு ரூ.134 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம், விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து கேட்கப்பட்டபோது, “விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டுபிடித்ததே மாநில அரசுதான்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை வழங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 13 மாவட்டங்களில் இந்த பிரச்சினை உள்ளது. தகுதியுடைய 41 லட்சம் விவசாயிகள் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் இந்த நான்கு மாத காலத்துக்குள் இது 46 லட்சமாக உயர்ந்தது. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. குறுகிய காலத்தில் இத்திட்டத்தில் பணம் பெற்றதால் சந்தேகம் எழுந்தது. இத்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு நடந்த இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டை, குடும்ப அட்டை கொண்டு தானாக பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு கூறியதால்தான் இந்த தவறு நடந்துள்ளது. இதனால் தான் இந்த பிரச்சினை எழுந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தில் 5 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 81 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

34 ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் முதல்வர்.

You may also like
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்
முதல்வர் பழனிசாமியுடன் அரசு கொறடா சந்திப்பு
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி
தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!

Leave a Reply