Home > அரசியல் > கலைஞரின் சாதனைகளை நினைவூட்டும் ஸ்டாலின் கடிதம்

கலைஞரின் சாதனைகளை நினைவூட்டும் ஸ்டாலின் கடிதம்

கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவருமான கலைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 94ஆவது வயதில் காலமானார். கலைஞருடைய இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த வருடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைதிப் பேரணி, முரசொலி அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த வருடம் அதுபோன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. திமுக நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு நேற்று (ஆகஸ்ட் 6) எழுதிய கடிதத்தில், “எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கலைஞர் அவர்களின் திருமுகம்தான் தெரிகிறது. காவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, காவேரி மருத்துவமனையில் கண் மூடி நிரந்தர ஓய்வெடுக்கும் நாள் வரை, தமிழ்மொழியின் பெருமை – தமிழ் இனத்தின் உரிமை – தமிழகத்தின் செழுமை – முதன்மை இவற்றிற்காகவே தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த இலட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில், ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது உழைத்தார் கலைஞர்” என்று புகழாரம் சூட்டினார்.

கலைஞர் பிறந்த 1924ஆம் ஆண்டு தமிழகத்தின் நிலை என்ன? தமிழர்களின் கல்வி – பொருளாதாரச் சூழல் என்ன? 1974ல் கலைஞருக்கு 50 வயது நிறைவடைந்த போது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றிய கால கட்டத்தில் தமிழகத்தின் நிலை என்ன? தமிழர்களின் கல்வி – பொருளாதாரச் சூழல் என்ன என்பதை எண்ணிப் பாருங்கள் என்ற ஸ்டாலின்,

பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கமுடியாமல் இருந்த ஆயிரமாயிரம் குடும்பங்களில் கல்லூரிக்குச் செல்லும் பட்டதாரி மாணவர்களை உருவாக்கிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் கலைஞர்.குடிசை வீடுகளை அடுக்குமாடிகளாக ஆக்கி ஏழைகளை ஏற்றம் பெறச் செய்ததில் இந்தியாவின் முன்னோடித் தலைவர். நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் வாயிலாக எளிய விவசாயிகளுக்கு நிலங்களை உரிமையாக்கி அந்த நிலங்களில் நீர் பாய்ச்சிட இலவச மின்சாரம் வழங்கி அவர்களின் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்து அவர்கள் விளைவித்ததை விற்பனை செய்திட உழவர் சந்தைகளைத் திறந்தவர். பேருந்துகளை நாட்டுடைமையாக்கியும், மினி பஸ் திட்டம் வாயிலாகவும் குக்கிராமங்கள்வரை போக்குவரத்து வசதி தந்தவர். மின்னொளி பெறாத கிராமங்களே இல்லை என்கிற நிலையைத் தமிழகத்தில் அரைநூற்றாண்டுக்கு முன்பே உருவாக்கிய தொலைநோக்காளர்.
தகவல் தொழில்நுட்பக் கொள்கையை, பிற மாநிலங்களுக்கு முன்பாகவே வடிவமைத்து அறிவியல் துணையுடன் கணினித் துறையில் புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற வகையில் டைடல் பூங்காக்களை உருவாக்கிய நவீன தமிழகத்தின் சிற்பி என்று கலைஞர் செய்தி திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துவைத்தார்.

மேலும், இயற்கையின் சதி நம்மிடமிருந்து அவரைப் பிரித்தபோது, வங்கக் கடற்கரையில் அவருக்கு இடம் வழங்கவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக வெளிப்பட்டது. இறப்பிலும் சளைக்காத இடஒதுக்கீட்டுப் போராளி என மக்களின் மனதில் நிலைத்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் அயராமல் போராடினார். பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்குவதில் இந்திய அரசியலின் சூத்திரதாரியாக விளங்கிய தலைவர் கலைஞர்

ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும் – நலன்களைக் காக்கவும் முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார் கலைஞர்” என்று கூறினார் ஸ்டாலின்.நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும் என்றும் தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்

You may also like
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.
தம்பிகளின் தல வரலாறு. பாகம் # 1

Leave a Reply