Home > செய்திகள் > 54 வயதில் மேல்நிலை கல்வி படிக்கும் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத்

54 வயதில் மேல்நிலை கல்வி படிக்கும் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத்

29 வருடங்களுக்குப் பிறகு ஜார்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ பிளஸ் 1 படிக்க விண்ணப்பித்துள்ளது, கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கிறது.

ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் மூத்த தலைவரான 54 வயதாகும் ஜகர்நாத் மஹ்தோ கிரீதி மாவட்டம் தும்ரி தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவரின் கல்வித் தகுதி குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் 11ஆம் வகுப்பு சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளார் ஜகர்நாத். நவாடிஹில் உள்ள தேவி மஹ்தோ மெமோரியல் இன்டர் கல்லூரிக்கு நேற்று சென்ற அமைச்சர், மாணவராக மாறி அங்குள்ள கவுண்டரில் வரிசையில் நின்று விண்ணப்பப் படிவத்தை வாங்கி தானே பூர்த்தி செய்தார். அட்மிஷன் கட்டணமாக 1,000 ரூபாயையும் செலுத்தினார்.
மீண்டும் பள்ளி செல்வதற்கான எனது முடிவு கல்வி அமைச்சராக நான் பதவியேற்றபோது எனது கல்வித் தகுதி குறித்து கேலி செய்தவர்களின் விமர்சனங்களை மவுனமாக்கும் என நம்புவதாக ஜகர்நாத் தெரிவித்தார். வறுமையின் காரணமாக இடைநின்ற கல்வியை மீண்டும் தொடருவதில் தான் உற்சாகமாக இருப்பதாகவும், ஜார்க்கண்டில் கல்வி முறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் இது வாய்ப்பளிக்கும் எனவும் கூறினார்.கூடுதலாக பணியாற்றி அமைச்சராகவும், அதே சமயம் ஒரு மாணவராகவும் என்னுடைய பொறுப்புகளை நிறைவு செய்வேன்” என்று ஜகர்நாத் குறிப்பிட்டார். மேலும், அரசியல் அறிவியலில் ஆர்வமாக இருப்பதால் கலைப் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். அர்ப்பணிப்புடன் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவேன், கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துவேன். மாநிலத்தில் கல்வி முறையை மேம்படுத்த முயற்சிப்பேன். ‘மெட்ரிக்-பாஸ் கல்வி அமைச்சர்’ என என்னை விமர்சனம் செய்தவர்கள் சாதகமான மாற்றங்களை காண்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

போகாரோ மாவட்டத்தின் சந்திரபுரா தொகுதியின் கீழ் உள்ள அலர்கோ ஜகர்நாத்தின் சொந்த ஊராகும். 1995 ஆம் ஆண்டில் டெலோவில் உள்ள நேரு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் தனது 29ஆவது வயதில்தான் இந்தத் தேர்வை எழுதினார். ஏனெனில் அவரது பெற்றோரால் அவரை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.உடன்பிறந்த ஐந்து பேரில் இவர்தான் மூத்தவர். அலர்கோ எந்தவித வசதிகளும் இல்லாத ஒரு குக்கிராமமாகும். இப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் வலுவுடன் இருந்தனர். சரியான பள்ளிகள் இல்லை, இருந்த பள்ளிகளில் வழக்கமான ஆசிரியர்கள் வருவது இல்லை. விஷயங்கள் மிகவும் மோசமாகிவிட்டால் நான் பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது” என்றும் ஜகர்நாத் கூறுகிறார். தனக்கு உயர்கல்வி பயில ஆசை இருப்பதாகவும், ஆனால் தனது முதல் இலக்கு பள்ளிப்படிப்பை முடிப்பது தான். அதன்பின்னரே பட்டதாரி ஆகுவது குறித்து நினைப்பேன் என்றும் கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள், 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி தகுதியை மட்டும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
சிறப்பு ரயில் மூலம் 1,136 பயணிகளை அனுப்பியது தமிழக அரசு

Leave a Reply