Home > செய்திகள் > தமிழ் விருப்ப பாடம் என்பதை ஏற்க முடியாது-உயர் நீதிமன்றம்

தமிழ் விருப்ப பாடம் என்பதை ஏற்க முடியாது-உயர் நீதிமன்றம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக கற்பிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தைச் சேர்ந்த மதுரை பொன்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், “கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கப்படுவதில்லை.

ஆறாம் வகுப்பிற்கு மேல் வகுப்பிற்கு, 20 மாணவர்களுக்கு மேல் விரும்பினால் மட்டுமே தமிழ் பாடம் கற்பிக்கப்படும். இதற்குத் தமிழ் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம், இலவசக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் தமிழக அரசின் தமிழ் கற்றல் விதி ஆகியவற்றிற்கு எதிரானது.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 50 சதவிகிதத்தினர் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படும் எனத் திருத்தம் செய்து, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் R. அழகுமணி, “ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ்நாடு கல்வி சட்டத்தின்படி தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கௌரி, “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 50 சதவிகிதம் பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களுக்காகத் தொடங்கப்பட்டது. விருப்பப்பாடமாக தமிழ் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம் ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியைக் கற்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினர்.

பிரதமர் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் இந்தி, ஆங்கிலம் மட்டுமே படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது.

இப்படியே சென்றால் வரும் காலங்களில் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

தாய் மொழியில் கல்வி கற்கும் ஜெர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. அனைத்து மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மொழியை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கில் நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி ஒத்திவைத்தனர்.

You may also like
நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம்
இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!
வட்டிக்கு வட்டி வசூலிப்பதை அனுமதிக்ககூடாது- மதுரை உயர்நீதிமன்றம்
’மனுஸ்மிரிதி சட்ட புத்தகம் அல்ல’ – சென்னை உயர் நீதிமன்றம்

Leave a Reply