Home > செய்திகள் > தமிழக கல்வி அமைச்சர் ஆளுனர்கள் மாநாட்டில் கலந்துகொள்வாரா?

தமிழக கல்வி அமைச்சர் ஆளுனர்கள் மாநாட்டில் கலந்துகொள்வாரா?

தேசிய கல்விக் கொள்கை-2020 குறித்து ஆளுநர்களின் மாநாடு இன்று (செப்டம்பர் 7) காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்ற இருக்கிறார்கள்.

‘உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு’ என்னும் தலைப்பிலான இந்த மாநாட்டை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கை-2020, முந்தைய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

7 செப்டம்பர் அன்று நடக்கவிருக்கும் ஆளுநர்களின் மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாநாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றம் கூடும் முன்பே புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் பிரதிநிதிகளான மாநில ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்!

மாநில உரிமைகள் குறித்தெல்லாம் கவலையற்ற அதிமுக அரசு, புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராயக் கல்வியாளர்கள் கூட இன்றி ஒப்புக்கு குழுவை அமைத்துள்ளது – குழுவின் பரிந்துரைகள் மீது பாரத்தைப் போட்டு தப்பி விடும் கண்துடைப்புத் தந்திரம் இது.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள நிலையில் நேர்மையான விவாதங்களுக்கு பிரதமர் வழியமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய தமிழக அரசு குழு அமைத்துள்ள நிலையில் இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தோடு , தமிழக கல்வி அமைச்சர் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You may also like
பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்

Leave a Reply