Home > செய்திகள் > ஆசிரியர் தினத்தை புனிதப்படுத்திய சாமிதுரை

ஆசிரியர் தினத்தை புனிதப்படுத்திய சாமிதுரை

நேற்றுஆசிரியர் தினம். பலரும் தங்கள் பள்ளியில் பயின்றபோது தங்களை வகுப்பில் கவர்ந்த ஆசிரியர்களைப் பற்றி பதிவிட்டார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதுதான் நமது சமூகத்தின் மதிப்பு மிகு வரிசை. சிலருக்கு இந்த வரிசையில் ஆசிரியர் முதலாவதாக வந்துவிடுவார்.

வகுப்பறையில் அறிவு விளக்கேற்றி வைக்கும் ஆசிரியர்களே நம் அனேகருக்கும் வாய்த்திருப்பர். ஆனால், தாய் தந்தை இழந்த ஒரு குழந்தைக்கு தாயுமாகி தந்தையுமாகி வளர்த்து ஆளாக்கி சடங்கு வரை செய்திருக்கும் ஆசிரியரைப் பற்றிக் கேள்விப்படும்போது கண்களுக்குள் ஈரம் உருவாகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்திருக்கிறது.

இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் சாமி துரை. இவரது பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு பிள்ளையின் வீட்டுச் சூழலையும் அறிந்து அவர்கள் மேல் அன்பு செலுத்தி அக்கறை காட்டுவது சாமிதுரையின் வழக்கம்.

கிராமத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளி என்பதால் பெரும்பாலான பிள்ளைகளுக்குப் பின்னணி இசையாக வறுமையே ஒலிக்கும். இந்த நிலையில் தான் 2010- ஆம் ஆண்டு அசகளத்தூரை சேர்ந்த கோம்பையன் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் கலைச்செல்வி என்ற குழந்தையை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கிறார்கள். வழக்கம் போல கலைச்செல்வியின் வீட்டுச் சூழலைப் பற்றி விசாரித்தார் சாமிதுரை.

கள்ளக்குறிச்சியில் பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி, கழிவறை சென்று வருவதாக சொல்லி ஒரு குழந்தையை பச்சையம்மாள் கையில் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

காலை பத்து மணிக்கு குழந்தையைக் கொடுத்துச் சென்ற அந்த தாய் மதியம் 2 மணி வரை வரவே இல்லை. கையில் யார் பெற்ற பிள்ளையோ… பச்சையம்மாளுக்கும் குழந்தை இல்லை என்பதால் தெய்வம் கொடுத்த பரிசு என்று அந்த மகாலட்சுமியை தூக்கி வந்து வளர்க்க ஆரம்பித்தனர். அவளுக்கு கலைச்செல்வி என்று பெயரும் இட்டனர். அந்த குழந்தையை தான் முதல் வகுப்பில் சேர்க்க வந்திருந்தனர்.

கலைச்செல்வியின் பின்னணியை அறிந்த சாமிதுரை அவள் மேல் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்தார். வளர்ப்புப் பெற்றோரும் கூலித் தொழிலாளிகள். அவர்கள், ‘கலைச்செல்வி நல்லா படிக்குது. ஆனா அவ படிப்புக்கு எங்களால செலவு பண்ண முடியலய்யா’ என்று கசிகின்றனர். உடனே சாமிதுரை அந்த மாணவியின் முழு கல்விச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறார். அந்த மாணவி தொடக்கப் பள்ளியை முடித்து ஆறாம் வகுப்புக்கு மற்றொரு அரசுப் பள்ளிக்கு மாற்றப்படுகிறார்.

ஆனபோதும் தொடர்பையும் கல்விச் செலவையும் தொடர்கிறார் சாமிதுரை. ஒரு கட்டத்தில் வளர்ப்புத் தந்தைகளான கோம்பையனும், பச்சையம்மாளும் இறந்துவிட கலைச்செல்வியை பச்சையம்மாளின் அக்கா கலியம்மாள் வளர்க்கிறார். அவரிடம் வளர்ந்தபோதும் ஆசிரியர் சாமிதுரையின் உதவிகள் தொடர்கின்றன. இந்நிலையில் குழந்தையாய் சாமிதுரையின் கையில் ஒப்படைக்கப்பட்ட அந்த பெண் காலத்தோடு வளர்ந்து குமரியாகிவிட்டார்.

கலைச்செல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் சாமிதுரை சாரின் பங்கை அறிந்த உறவினர்கள் சாமிதுரை சாருக்கு தகவல் கொடுத்தனர். ‘சார்… நீங்க உங்க பொண்ணு போலவே வளர்த்த செல்வி பெரிசாயிட்டா. செப்டம்பர் 5 சடங்கு சுத்துறோம்’ என்ற தகவல் சாமிதுரைக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர் தினமும் இந்த அன்பான தினமும் ஒன்றாகவே வருவது என்பது காலம் செய்த அழகு.

நேற்றுகாலை கலைச்செல்வியின் வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் சாமிதுரை ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து மிகச்சிறப்பாக மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தி… அனைத்துச் செலவையும் அவரே ஏற்றுள்ளார். அதிலும் அக்குழந்தை பயின்ற அசகளத்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து சீர்வரிசைத் தட்டுகளை வைத்து மேளதாளங்களுடன் உறவினர்களை அழைத்து அவரும் கையில் ஒரு தட்டு எடுத்துக் கொண்டு சாமிதுரை ஆசிரியர் நடந்ததைப் பார்த்தே ஊரே சிலிர்த்தது.

அட… ஆசிரியர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் எல்லாம் நேற்று ஒரே தினத்தில் வந்திருக்கிறது அசகளத்தூர் கிராமத்துக்கு!

Leave a Reply