Home > செய்திகள் > முதல்வர் வீட்டு முன் போராட்டம் நடத்த திரண்ட ஆசிரியர்கள்

முதல்வர் வீட்டு முன் போராட்டம் நடத்த திரண்ட ஆசிரியர்கள்

2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது வரை பணி ஒதுக்கப்படாததால் பட்டதாரி ஆசிரியர்கள் சேலத்தில் முதல்வர் இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. தேர்வு நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததால் தேர்வு எழுதிக் காத்திருப்பவர்கள் விரைவில் ஆணை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ், 7ஆண்டுகளுக்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது.

ஆனால் இதுதொடர்பாகவோ அல்லது கிட்டவிட்ட 7 ஆண்டுகளாகப் பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் குறித்தோ தமிழக அரசு எந்த அறிவிப்பு வெளியிடவில்லை,

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், உடனடியாக பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முதல்வர் வீடு முன்பு வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் இன்று முதல்வர், 2021 சட்டமன்றத் தேர்தலுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், அதிகாலை முதலே ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு காவல்துறை அழைத்துச் சென்றனர்.இதையடுத்து அங்கும் போராட்டத்தை ஆசிரியர்கள் தொடர்ந்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், முதல்வரைச் சந்தித்து எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர் சொல்லும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்கள்.

இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், 2013ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply