Home > செய்திகள் > லெபானானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த மிகப்பெரிய வெடிவிபத்து

லெபானானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த மிகப்பெரிய வெடிவிபத்து

லெபானான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இதுவரை கண்டிறாத வகையில் மிக்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் முதல்கட்ட தகவலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை 78க்கும் மேல் என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 4000 என்று ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடித்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. ஏதோ மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் போரின் போது நடத்தப்பட்டது போன்று கோரமாக நகரமே காட்சியளிக்கிறது.

பெய்ரூட் நகரில் இருந்த ஒரு கோட்டை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. பெய்ரூட் நகரில் நடந்த இந்த வெடிவிபத்து நில அதிர்வில் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மத்தியதரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டுள்ளது, ஏறக்குறைய 200 கி.மீ தொலைவில் உள்ள சைப்ரஸ் நகரத்துக்கும் இந்த சத்தம் கேட்டு, அதிர்வு உணரப்பட்டுள்ளது.

பெய்ரூட் நகரில் நடந்த வெடிவிபத்தில் நகரமே உருக்குலைதந்து கிடக்கும் காட்சி

ஏற்கெனவே கரோனா வைரஸ் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் லெபானான் நாடு திண்டாடிவரும் நிலையில் இந்த வெடிவிபத்து பேரிடியாக அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்து நடந்தபின் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வந்து சாலையிலும், வீடுகளிலும் கிடக்கும் உடல்களை கொண்டு சென்றவாறு இருந்தன.

சிறிது நேரத்தில் மருத்துவமனைகளில் அனைத்து இடங்கலும் நிரம்பி, காயமடைந்தவர்ளை சாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெய்ரூட் நகரில் நடந்தது வெடிவிபத்தா அல்லது இஸ்ரேல் நடத்திய தாக்குதலா என்ற கேள்வி வெடிச்சத்தம் கேட்டதும் மக்கள்மத்தியில் இருந்தது. ஆனால், இஸ்ரேல் அரசு தாங்கள் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவில்லை, எங்கள் விமானம் அங்கு செல்லவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், பெய்ரூட் நகரில் உள்ள பழையான கோட்டையில் இருந்து ஆரஞ்சு நிறத்தில் புகை மிகப்பெரிய அளவில் மேகக்கூட்டம் போல் வெடிச்சத்தம் கேட்டபின் மேலே எழுந்தது என்று அதைப் பார்த்த மக்கள் தெரிவித்தனர், பல்வேறு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தவெடிச் சத்தம் கேட்டபின் நகரில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிக் கதவுகள் பல கி.மீ தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டன.

இந்த வெடிவிபத்துக்கு உண்மையான காரணம் இதுவரை அந்நாட்டு அரசால் முழுமையாகக் கண்டுபிடித்து வெளியிடப்படவில்லை.

ஆனால் முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பெய்ரூட் நகரில் உள்ள பழமையான கோட்டையில் மிகப்பெரிய வெடிமருந்து கிட்டங்கியை அரசு செயல்படுத்தி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கடற்பகுதியில் ஒரு கப்பலை பறிமுதல் செய்தபோது, அதில் இருந்த ஏராளமான வெடிமருந்துகள் இந்த கோட்டையில் சேமித்து வைக்கப்பட்டன. இந்த வெடிமருந்து வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பெய்ரூட்டில் உள்ள தொலைக்காட்சி சேனல் எல்பிசி வெளியிட்ட செய்தியில், “ வெடித்தவுடன் மஞ்சள் நிறத்தில் புகை மேலே எழும்பியது. இது சோடியம் நைட்ரேட் போன்று இருந்தது. அதன் மணம் நச்சுத்தன்மை கொண்ட நைட்ரஜன் டைஆக்ஸைடு போன்று இருந்தது” எனத் தெரிவித்தது.

இஸ்ரேல், ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கு இடையே தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வெடிவிபத்து நடக்க சில நிமிடங்களுக்கு முன் வானில் ஒரு விமானம் பறந்து சென்றதால், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவிட்டதாக மக்கள் பதற்றம் அடைந்தனர். ஆனால், இஸ்ரேல் இதை மறுத்துவிட்டது.

பெய்ரூட்டில் இதற்கு முன் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன, உள்நாட்டு போர் நடந்துள்ளது, தற்கொலைப்படைத்த தாக்குதல்கள் நடந்துள்ளன, இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், அனைத்தையும் மிஞ்சும் வகையில் இந்த வெடிவிபத்து இருக்கிறது என்று நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாலையில் சென்றோர், வாகனத்தில் சென்றோர், வீடுகளில் ஓய்வு எடுத்தோர், கடைகளில் குழுமி இருந்த மக்கள் அனைவரும் இந்த தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். ரத்தமும், சதையுமாகவும், உடைந்த கை கால்களுடன், சாலையில் மக்கள் கிடத்தப்பட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

காயமடைந்த மக்கள் சாலையில் கிடத்தப்பட்டுள்ள காட்சி

சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் ஹமாத் கூறுகையில் “ இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு அவசர மீட்புக் குழுக்கள் பெய்ரூட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. காயமடைந்தவர்கள் வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ராணுவஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த மோசமான வெடிவிபத்தால் பெய்ரூட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளும் மோசமாகச் சேதமடைந்தன. இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க முடியாத நிலையில் வேறு நகரத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

பெய்ரூட் கடற்கரையில் கரோனா வைரஸ் சூழலில் உதவுவதற்காக ஐ.நா. அமைதிக்குழுவின் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வெடிவிபத்தில் அந்த கப்பலும், கப்பலில் இருந்த ஏராளமான பணியாளர்களும் மோசமாக காயமடைந்துள்ளனர் .

Leave a Reply