திமுகவின் எதிர்ப்பை அடுத்து சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டும் கட்டணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது.
அதாவது குப்பை கொட்டுவதற்கு வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை குப்பை கொட்டுவதற்கான கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
அதேபோல் அலுவலகங்கள் ரூபாய் 300 முதல் ரூபாய் 3000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். திருமண மண்டபங்களுக்கு ரூபாய் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும், உணவு கூடங்களுக்கு ரூபாய் 300 முதல் 5000 வரை குப்பை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநகராட்சிக்கு புதுப்புது வரிகள் போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? ஒரு வரியை விதிக்கும் முன்பு மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாமா? மாநகர மன்றத்தில் வைத்து விவாதிக்க வேண்டாமா” எனக் கேள்வி எழுப்பினார்.
குப்பை கொட்டும் கட்டணம் என்று ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் பணம் பறித்து, பகல் கொள்ளைபோல் ஒரு மாநகராட்சி செயல்படுவது அராஜகமானதாகும் என்றவர், “குப்பை கொட்டக் கட்டணம் என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். இல்லை திமுக ஆட்சியில் இந்தக் குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
சென்னை மாநகராட்சியின் நிதி முறைகேடு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தவறு செய்தோர் யாராக இருந்தாலும் தக்கபடி தண்டிக்கப்படுவர்” என்று எச்சரித்தார்.
திமுகவின் எதிர்ப்பை அடுத்து குப்பை கொட்டும் கட்டணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி நேற்று(டிசம்பர் 24) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தற்போது கொரானா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச் சங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், “மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி.
குப்பை கொட்டவும் வரி என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?. எண்ணித்துணிக கருமம் என அதிமுக அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்