Home > செய்திகள் > புதிய கல்வி கொள்கையை ஆராய கல்வியாளர்கள் குழு அமைக்கிறது தமிழக அரசு

புதிய கல்வி கொள்கையை ஆராய கல்வியாளர்கள் குழு அமைக்கிறது தமிழக அரசு

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைக்கிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளன 1967க்கு பின் அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கை தமிழகத்தில் இன்று வரை அமலில் இருக்கும் நேரத்தில், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் விதத்தில் கல்விக் கொள்கை இருப்பதாகவும், இதனை நிராகரிக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில் தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் பிரதமருக்கு வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து மும்மொழிக் கொள்கை மட்டுமில்லாமல் பிற அம்சங்களையும் எதிர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை குரல் எழுந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், “மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கிறது தமிழக அரசு.

You may also like
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
அற்புதங்களின் குவியல் அண்ணா!
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்
கரை கடந்து வட தமிழக தரை பகுதிக்குள் நுழைந்த நிவர்

Leave a Reply