தொற்றுநோய் பரவும் அபாயத்தைக் காட்டிலும் கோடிக்கணக்கான மக்கள் உணவுக்காக திண்டாடுவதை தடுப்பதே முக்கிய பணி என்றும், அவர்களுக்கு உதவிசெய்ய முப்படைகளையும் பயன்படுத்தலாம் என்றும் முன்னாள் கடற்படை தளபதி ராமதாஸ் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
1949 ஆம் ஆண்டு கடற்படையில் சேர்ந்த ராமதாஸ், மகாத்மா காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் நிலவியதைக் காட்டிலும் படுமோசமான நிலைமை நாடுமுழுவதும் இருக்கிறது. மக்கள் உணவுக்காக காத்திருக்கும் கொடுமை மனதை புண்ணாக்குகிறது.
முப்படையையும் பயன்படுத்தி மக்களுடைய துயரங்களை துடைக்க ராணுவ அமைச்சகத்துக்கு மோடி உத்தரவிட வேண்டும். நாடு முழுவதும் அதிகப்படியாக குவித்து வைத்துள்ள உணவு தானியத்தை உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு வினியோகிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கர் பிறந்தநாளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கவும் தற்போதுள்ள நெருக்கடியிலிருந்து கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மீள்வதற்கும் உரிய திட்டங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனித்திருக்கச் சொன்ன மோடி, ஒருவேளை உணவுக்காக குஜராத்தின் சூரத் நகரிலேயே குவிந்திருக்கும் மக்கள் கூட்டத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்காமல் கேட்டிருக்கிறார் ராமதாஸ் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.