நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) மாலை நடைபெற்ற கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 207.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்துடன் 43.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார். பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான சோதனைகள் நடைபெறுகின்றன.
இதன் மூலம் தான் அதிக அளவில் கொரானா பாதித்தவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
பலருக்கு அறிகுறிகளே தென்படாத நிலையில், சோதனை செய்தால்தான் தொற்று இருப்பது தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்குச் செல்லும்போதும் நானும் என்னுடன் வருபவர்களும் கொரானா பரிசோதனை செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
வேளாண் பணிகள் 100 சதவிகிதம் நடைபெற்று வருவதாகவும், தொழிற்சாலைப் பணிகள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன எனத் தெரிவித்த முதல்வர், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்த மாநிலமும் தமிழ்நாடுதான். ஜிடிபி சதவிகிதம் இந்திய அளவைவிட தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது” என்று கூறினார்.
மேலும், “தமிழகத்தில் எந்தவிதத்திலும் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் ஏழரை லட்சம் பேர் தங்கி பணி செய்துவந்தார்கள்.
அந்த அளவு தமிழகத்தில் வேலைவாய்ப்பு இருக்கிறது. நம் மாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது போல வெளி மாநிலத் தொழிலாளர்களையும் நாம் வேலைக்குப் பயன்படுத்தி வருகிறோம்.
அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்த மாநிலம் தமிழ்நாடுதான்” என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
ஊரடங்கால் பெரும்பாலானவர்கள் வேலையின்றி தவித்து வரும் சூழலில், முதல்வரின் இந்தத் தகவல் எதிர்க்கட்சியினரிடையே கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது