Home > செய்திகள் > மதுவிற்பனை என்பது கொள்ளையடிப்பதற்கு சமம்-உயர்நீதிமன்றம்

மதுவிற்பனை என்பது கொள்ளையடிப்பதற்கு சமம்-உயர்நீதிமன்றம்

மது விற்பனை என்பதே கொள்ளை அடிப்பதற்குச் சமம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஒவ்வொரு மதுபாட்டில்களுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கின்றனர். போலி மது பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த கடைகளிலும் ரசீது வழங்கப்படுவதில்லை.

எனவே அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனைக்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்கவும், மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கவும், போலி மதுபான விற்பனையை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மது விற்பனை என்பது கொள்ளையடிப்பதற்குச் சமம் என்று தெரிவித்த நீதிபதிகள் பெரும்பாலானவர்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தான் மது வாங்கி குடிக்கின்றனர்.

இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது என்பது கொள்ளையடித்தவர்களிடமே கொள்ளை அடிப்பது போன்றது என்று குறிப்பிட்டனர்.

மேலும் கடைகளில் நீதிபதிகளே நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று எச்சரித்த நீதிபதிகள் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, கடந்த 10 ஆண்டுகளில் மது விற்பனை லாபம், செலவு, நஷ்டம் எவ்வளவு? எத்தனை நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு மதுவை வாங்குகிறது? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Leave a Reply