Home > செய்திகள் > வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து மற்றும் ரயில், பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மே மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரயில் சேவை போன்று விமான சேவையும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இருப்பினும், மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வெளிநாடுகளில் இருந்துவரும் தமிழர்கள் சொந்தஊர் செல்ல தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்க உத்தரவிடக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தமிழகத்துக்கு 58 விமானங்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் இயக்கப்பட உள்ளன என மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் சென்னை விமான நிலையத்துக்கு 41 விமானங்களும், திருச்சி விமான நிலையத்திற்கு 11 விமானங்களும், கோவை விமான நிலையத்திற்கு 4 விமானங்களும், மதுரை விமான நிலையத்திற்கு 2 விமானங்களும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து விமான இயக்கம் தொடர்பான விவரங்களை ஜூலை 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

You may also like
சுப்ரமணிய பாரதியார்
செப்.1 முதல் பள்ளிகளை திறக்க திட்டம் -தமிழக அரசு
வேளாண் சீர்திருத்த சட்டங்கள் – பிரதமர் மோடி விளக்கம்
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!

Leave a Reply