Home > செய்திகள் > மணல் கடத்தல் வழக்குகளில் சம்பந்தபட்டவர்களுக்கு முன்ஜாமீன் இல்லை

மணல் கடத்தல் வழக்குகளில் சம்பந்தபட்டவர்களுக்கு முன்ஜாமீன் இல்லை

மணல் கடத்தல் வழக்கில் சிக்குபவர்களுக்கு இனி முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த வழக்குகளில் ஜாமீன் அல்லது முன்ஜாமீன் கோரினால் அபராதத்துடன் எளிதில் கிடைத்து விடுகிறது என்பதால், மீண்டும் மணல் கடத்தல் நடைபெறுவது என்பது தொடர்கதையாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய 40 பேருக்கு முன்ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

அதாவது உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கவில்லை என்றால் மணல் கடத்தல் கும்பல் மாவட்ட நீதிமன்றங்களை அணுகி முன்ஜாமீன் பெற்று விடுகின்றன என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் எளிதாகக் கிடைத்து விடுகிறது என்பதால் குற்றச் செயல்களும் அதிகரிக்கிறது. இந்த நிலை நீடித்தால் கனிமவளம் கேள்விக்குறியாகிவிடும்.

அடுத்த தலைமுறையினர் குடிநீருக்குக் கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுவிடும்.

இயற்கை வளங்களைச் சுரண்டி பிழைப்பு நடத்துவோர் சில காலமாவது சிறைக்குள் இருந்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் நடப்பது குறையும் என்று தெரிவித்து செப்டம்பர் 3ஆம் தேதி விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று வழக்கை ஒத்திவைத்தார்.

நேற்று (செப்டம்பர் 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாட்டையே ஊரடங்கு முடக்கிப் போட்டு இருந்தாலும் மணல் கடத்தல்காரர்களை மட்டும் பாதிக்கவில்லை.

கடுமையான அபராதம் விதித்து முன்ஜாமீன் வழங்கிய போதும் நீதிமன்றத்துக்கு வரும் முன்ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை.

முன் ஜாமீன் வழங்கும் போது விதிக்கப்படும் அபராதங்களைத் தொழில் செலவாகவே கருதிக் கொள்கிறார்கள்.

தினசரி குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன.
கனிமங்கள், மணல், காடுகள் எனச் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

எனவே சுற்றுச்சூழலைப் பேணி காக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இனி மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் கோரி வருபவர்களுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து 40 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like
op-ravindranath-petition-cancelled-in-high-court
ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா – இன்று தீர்ப்பு
உச்சநீதிமன்ற
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
நீட் தேர்வு நடைபெறுமா நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு
கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள் விவரத்தை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு!

Leave a Reply