Home > செய்திகள் > உ.பி போலீஸின் நடவடிக்கை பாஜக பிம்பத்தை குறைத்துள்ளது: உமா பாரதி கருத்து

உ.பி போலீஸின் நடவடிக்கை பாஜக பிம்பத்தை குறைத்துள்ளது: உமா பாரதி கருத்து

ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு பாலியல் கொலை சம்பவத்தில், உத்தரப் பிரதேச போலீசாரின் சந்தேகமான நடவடிக்கை பாஜகவின் பிம்பத்தை குறைத்துள்ளது என்று மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினரை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உமாபாரதி வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன்னை அவருடைய மூத்த சகோதரி என்று கூறிய உமா பாரதி, உ.பி முதல்வரை கரைபடியாத புகழுடைய நிர்வாகி என்று வர்ணித்துள்ளார். மேலும், உமா பாரதி, “ஊடகங்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க அனுமதிக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஆதித்யநாத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

மாநிலத்தின் ஆளும் பாஜகவைச் சேர்ந்த பல தலித் எம்.பி.க்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இந்த சம்பவம் நிர்வாகத்தின் பிம்பத்தை பலவீனமாக்கிவிட்டது என்றும் அது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறினர். இருபினும், எம்.பி.க்கள் இந்த சம்பவத்தை காவல்துறையில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதி மற்றும் ஊழல் காரணம் என்று குற்றம் சாட்டினர். அதே நேரத்தில் மாநில அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உமா பாரதி, அவர் நன்றாக இருந்திருந்தால், ஹத்ராஸில் உள்ள குடும்பத்தை சந்தித்திருப்பேன் என்று கூறினார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் அவர் நிச்சயமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பார் என்றும் கூறினார்.

“உ.பி. போலீசாரின் சந்தேக நடவடிக்கை பாஜகவின் பிம்பத்தையும் உ.பி. அரசு மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிம்பத்தையும் பலவீனமாக்கியுள்ளது.” என்று உமா பாரதி இந்தியில் தொடர்ச்சியான ட்வீட் செய்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நினைத்ததால், இந்த சம்பவம் குறித்து பேச ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும் உமா பாரதி கூறினார். இருப்பினும், காவல்துறையினர் கிராமத்திற்கு தடை விதித்த விதம், எந்த வாதங்களையும் பொருட்படுத்தாமல் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று அவர் கூறினார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில், அந்த பெண்ணின் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க உ.பி. அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்துள்ளது. 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை முதல்வர் ஆதித்யநாத் தனது அரசு பெண்களின் பாதுகாப்பில் உறுதியாக உள்ளதாகவும், அவர்களுடைய சுய மரியாதைக்கு தீங்கு விளைவிப்பதாக நினைப்பவர்கள் கூட முழு அழிவை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறினார். ஆதித்யநாத், “உ.பி.யில் பெண்களின் சுய மரியாதைக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களின் மொத்த அழிவு தவிர்க்க முடியாதது” என்று இந்தியில் ட்வீட் செய்தார்.

அதே நேரத்தில், உ.பி.யில் ஹத்ராஸில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை கொலையைக் கண்டித்து அரசியல் கட்சிகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் 2 வாரஙக்ளுக்கு முன்பு, 19 வயது தலித் பெண் ஆதிக்க சாதி ஆண்களால் கூட்டு பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் டெல்லியில் இருந்து அவருடைய கிராமத்துக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டது. குடும்பத்தினர் அந்த பெண்ணின் உடலை கடைசியாக ஒருமுறை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சி கேட்டபோதும், போலீசார் வலுக்கட்டாயமாக நள்ளிரவில் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது உத்தரப் பிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால், நாடு முழுவதும் ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஹத்ராஸ் போலீஸ் எஸ்.பி, அதோடு, சர்கிள் அதிகாரி ராம் ஷாப்ட், இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வர்மா, எஸ்.ஐ. ஜகவீர் சிங் மற்றும் தலைமை காவலர் மகேஷ் பால் ஆகியோரை உ.பி அரசு சஸ்பெண்ட் செய்துள்ளதாக உ.பி உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

You may also like
வாக்களிக்கும் முன் இதை படிங்க…
சாதிக்கொரு நீதி சொல்லும் மநுதர்மம் மட்டும்தான் இனி எங்கும் அளவுகோலோ?
வானதி சீனிவாசன் ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்..?
திமுகவுககு எதிரில் இருப்பது அதிமுக அல்ல ஆர்எஸ்எஸ் நச்சு!

Leave a Reply