Home > செய்திகள் > சீன ராணுவ அமைச்சரிடம் இந்திய ராணுவ அமைச்சர் பேசியது என்ன?

சீன ராணுவ அமைச்சரிடம் இந்திய ராணுவ அமைச்சர் பேசியது என்ன?

மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு நிறுவன (SCO) கூட்டத்துக்கு இடையே, சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர், ஜெனரல் வெய் பெங்கே விடுத்த வேண்டுகோளை அடுத்து, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரை செப்டம்பர் 4ஆம் தேதி சந்தித்தார்.

மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றம் வெடித்த பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் முதல் மிக உயர்ந்த மட்டத்திலான சந்திப்பு இது.

ராஜ்நாத் சிங் மற்றும் வீ ஆகியோர் மாஸ்கோவில் இரண்டு மணி 20 நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.இதுகுறித்து செப்டம்பர் 5ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இந்திய – சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இந்திய – சீன உறவுகள் ஆகியவை குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர். ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது என்று இந்தச் சந்திப்பின் போது சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் எல்லை நிர்வாகத்தில் இந்தியப் படை எப்போதுமே மிகவும் பொறுப்பான அணுகுமுறையைக் கையாள்வதாகவும், நாட்டின் எல்லை மற்றும் இறையாண்மையையும் இந்திய ராணுவம் உறுதியுடன் காக்கும் என்றும் ராஜ்நாத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச எல்லையில் சீனா திடீரென அதிகப்படியான படைகளைக் குவிப்பதோ, இந்திய எல்லைக்குள் நுழைய அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபடுவதோ, இருதரப்பு ஒப்பந்தங்களையும் மீறுவதாகும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “சீனா உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஓசி) கண்டிப்பாக மதிக்க வேண்டும், அதன் நிலைப்பாட்டை ஒருதலைபட்சமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.

தற்போதைய நிலைமை பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் நிலைமையை சிக்கலாக்கும் அல்லது எல்லைப் பகுதிகளில் விஷயங்களை அதிகரிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்றும் ராஜ்நாத் சிங் சீனாவிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங்கைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவுத் துறை அமைச்சரை மாஸ்கோவில் சந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like
தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஐநா சபை கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய இந்தியப் பிரதிநிதி…
மாநிலங்களவையில் எதிர்ப்புக்கிடையேநிறைவேறியது வேளாண் மசோதாக்கள்

Leave a Reply