Home > செய்திகள் > மோசமான தோல்விக்கு என்ன காரணம்-விராட் கோலி

மோசமான தோல்விக்கு என்ன காரணம்-விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த மோசமான தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு மோதலாக அடிலெய்டில் நேற்று முன்தினம் (டிசம்பர் 17) தொடங்கியது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது.

அஸ்வின் 15 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதுமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில், 300 ரன்களை இந்தியா எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மேற்கொண்டு 11 ரன்களை மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

இந்திய அணியில் உமேஷ் யாதவ், நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறினர். மேத்யூ வேட் (8 ரன்கள்) ஜோ (8 ரன்கள்) ஆகியோர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர்.

3 ஆம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய லாபுசேன் (47 ரன்கள் ) ஓரளவு தாக்குப்படித்தார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. உமேஷ் யாதவும் தன் பங்குக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

அதேபோல், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

72.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டி பெய்ன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் அடித்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி மீண்டும் மோசமான தொடக்கம் கொடுத்தது.

பிரித்வி 4 ரன் எடுத்து போல்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

மயங்க் அகர்வால் (5), ‘நைட் வாட்ச்மேன்’ பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று (டிசம்பர் 19) தொடர்ந்து விளையாடிய இந்திய பேட்ஸ் மேன்களின் விக்கெட் மளமளவென சரிந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸ் மூன்றாவது நாளில் இந்தியா 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறினார். இந்தியா தனது மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்துள்ளது.90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “அந்த வேதனையான உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

நாங்கள் பேட்டிங் செய்ய வந்தபோது 60 ரன்களுக்கு மேல் முன்னிலையில் இருந்தோம். ஆனால், உடனடியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம்.

இரண்டு நாட்கள் சிறப்பாக ஆடி, போட்டியில் ஒரு நல்ல நிலையில் இருந்தோம். ஆனால், ஒரு மணி நேரத்தில் தோல்வி அடைந்து விட்டோம்.

இன்று இன்னும்கூட தீவிரம் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸிலும் அவர்கள் இதே வகையான பந்துவீச்சைத்தான் காட்டினார்கள்.

ஆனால், இன்று நாங்கள் ரன்கள் சேர்க்கும் அவசரத்தில் இருந்தோம் என நினைக்கிறேன். உண்மையில் சிறப்பான பந்துகளை எதிர்கொண்டோம்.ஆனால், மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை.

மனநிலையில்தான் மாற்றம் என நினைக்கிறேன். அது வெளிப்படையாகத் தெரிந்தது.

கண்டிப்பாக இன்றைய ஆட்டத்திலிருந்து கற்றுக்கொண்டு அணி வீரர்கள் அடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply