மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
இந்த தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும், கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சியாட்டில் நகரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயது பெண்மணியிடம், இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
கொரோனை வைரஸை தடுக்க என்னால் முடிந்த ஒரு உதவியைச் செய்துள்ளேன்“ என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் பணியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய சுகாதாரத்துறையின் நிதி உதவி மூலம் மனிதர்கள் மீது இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதே நேரத்தில் இந்த தடுப்பு மருந்து, விலங்குகளின் நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டுமா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளும் வழக்கம் போல நடைபெறும்.