Home > செய்திகள் > பிரசாந்த் பூஷணை மாவீரர் ஆக்குவதும் ஆக்காததும் உச்ச நீதிமன்றத்திடம் தான் இருக்கிறது

பிரசாந்த் பூஷணை மாவீரர் ஆக்குவதும் ஆக்காததும் உச்ச நீதிமன்றத்திடம் தான் இருக்கிறது

மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷணுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு ஆகஸ்டு 25 அன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பற்றிய தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும், மன்னிப்பு கேட்டால் அது தன்னைத் தானே அவமதித்துக் கொண்டதாகிவிடும் என்றும் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், அருண் மிஸ்ரா, கிருஷ்ண முராரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் கே. கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில், “பிரசாந்த் பூஷணின் கருத்துகள் நீதிமன்ற சீர்திருத்தத்துக்காக சொல்வதாக மட்டுமே இருக்கின்றன.

எனவே அவருக்கு முதலில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு விட்டுவிடலாம். அவர் தண்டிக்கப்பட வேண்டியதில்லை” என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, “மக்கள் தவறு செய்கிறார்கள், சில சமயங்களில் நேர்மையாக தவறு என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் பிரசாந்த் பூஷண் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றுதானே இன்னும் சொல்கிறார். இன்னமும் தான் தவறு செய்ததாக நினைக்காத போது பிறகு அதை மீண்டும் செய்ய வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுவதில் என்ன பயன்?” என்று கேட்டார்.

இவ்வழக்கை விசாரிக்கும் இன்னொரு நீதிபதி பி.ஆர். கவாய், “அவர் செய்த பொது நல வழக்குகள் எல்லாம் நல்ல செயல்கள் தான்.

ஆனால் அவரது ஒரு பொது நல வழக்குக்கு ​​நீங்கள் கூட ஒரு அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தீர்கள். அவர் வருத்தம் தெரிவித்த பின்னரே நீங்கள் அதைத் திரும்பப் பெற்றீர்கள்.

ஆனால் இந்த வழக்கு அப்படி இல்லையே?” என்றார். (நீதிபதி கவாய் குறிப்பிட்டது ரஃபேல் விவகாரத்தில் பூஷணுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கைத்தான்)

அப்போது குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “நீதிபதி அவர்களே… அவர் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் பார்க்கிறீர்கள். பிரசாந்த் பூஷண் மக்கள் நலனுக்காகவே பல பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கில் அவரது பதிலை பதிவு செய்ய வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.

மீண்டும் பேசிய அருண் மிஸ்ரா, பிரசாந்த் பூஷணின் பதிலை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.

அட்டர்னி ஜெனரல் அவரது பதிலை பதிவு செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். இப்போது இது அகற்றப்பட்டால், அவருடைய பதிலை நாங்களாகவே அகற்றினோம் என்று குற்றம் சாட்டப்படுவோம்.

அவர் தன்னுடைய பதிலில் உச்ச நீதிமன்றம் உருக்குலைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இது ஆட்சேபகரமானது இல்லையா? என்று கேட்டார். பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றம் பற்றிய தனது புகார்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றால் மட்டுமே இந்த வழக்கை முடித்து வைக்க முடியும் என்று நீதிபதிகள் உறுதியாக கூறினார்கள்.

மேலும் மதியம் 1.30 மணிக்கு, உச்ச நீதிமன்றத்தின் மீதான புகார்களைத் திரும்பப் பெறுவதற்கு பூஷணுக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிக்கிறோம் என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.

பிற்பகல் இரண்டு மணிக்குப் பின் விசாரணை மீண்டும் தொடங்கியபோது பிரசாந்த் பூஷணின் வழக்கறிஞர் தவான், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் இருந்து வெளியேறுவதற்கு மன்னிப்பு கேட்பது என்பது ஊன்றுகோலாக இருக்க முடியாது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் மன்னிப்பு கேட்குமாறு யாரையும் வற்புறுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் விமர்சனங்களைத் தாங்குகின்ற திடமான தோள்களைப் பெற்றிருக்க வேண்டும்.

பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை அளித்தால் அவரை ஒரு சாரார் நீதித்துறையின் மாவீரராக போற்றுவார்கள். இன்னொரு சாரார் இது சரியான தண்டனை என்று கொண்டாடுவார்கள்.

பிரசாந்த் பூஷணை மாவீரர் ஆக்குவதும் ஆக்காததும் உச்ச நீதிமன்றத்திடம்தான் இருக்கிறதுஎன்று பதிலளித்தார்.

உச்ச நீதிமன்றம் இரண்டாம் முறை அளித்த அரைமணி நேர அவகாசத்துக்குப் பின்னரும் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அவருக்கு என்ன தண்டனை என்பதற்கான தீர்ப்பை ஒத்தி வைத்தது.

Leave a Reply