Home > அரசியல் > இறந்தவர்கள் பற்றிய விவரத்தை தர போலீஸ் முட்டுக்கட்டை போடுவது ஏன்?

இறந்தவர்கள் பற்றிய விவரத்தை தர போலீஸ் முட்டுக்கட்டை போடுவது ஏன்?

டெல்லி மதக்கலவரம் தொடர்பாக போலீஸ் எடுத்து முடிவுகள், எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தி வயர் இணைய இதழ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தது. ஆனால், டெல்லி போலீஸ் இதுகுறித்த பதிலளிக்க மறுத்ததுடன், ஆர்டிஐ சட்டத்தை மீறும் வகையில், தனது மறுப்புக்குரிய காரணத்தையும் சொல்ல மறுத்திருக்கிறது.

தி வயர் இணைய இதழ் இரண்டு விண்ணப்பங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பியிருந்தது.

முதல் விண்ணப்பத்தில், டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொதுமக்களின் பெயர்கள், வயது மற்றும் முகவரிகளையும், அதேபோன்று, கலவரத்தில் காயமடைந்ததாக சொல்லப்படும் போலீஸாரின் பெயர்கள், பொறுப்புகளையும், அவர்களுடைய காயம் எத்தகையது என்பது குறித்தும் விவரம் அளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. உயிர்பிழைத்தோர் மற்றும் இறந்தோர் பற்றிய விவரங்களை 48 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்பது ஆர்டிஐ சட்ட விதி ஆகும்.

இரண்டாவது விண்ணப்பத்தில் ஐந்து கேள்விகள் இடம்பெற்றிருந்தன…

1. 2020 பிப்ரவரி 24 முதல் 27 ஆம் தேதிவரை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற மதக்கலவரத்தில் டெல்லி போலீஸார் சுட்ட குண்டுகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

2. இதே நாட்களில் போலீஸார் பயன்படுத்திய கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் புல்லட்டுகள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் எத்தனை? பகுதிவாரியாக கணக்கு வேண்டும்.

3. கலவரம் நடந்த பகுதிகளில் எத்தனை போலீஸார் நிறுத்தப்பட்டனர்? பகுதிவாரியாக கணக்கு வேண்டும்.

4. கலவரத்தின் போது போலீஸ் உதவி கேட்டு எத்தனை போன் கால்கள் வந்தன? அந்த தொலைபேசி அழைப்புகளின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

5. வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தனி நபர்களின் பெயர்கள் விவரமும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் விவரமும், அவை பதிவு செய்யப்பட்ட காவல் நிலையங்களின் விவரமும் வேண்டும்.

இந்த விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று, டெல்லி வடகிழக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் கமிஷனரான எம்.ஏ.ரிஸ்வி பதில் அனுப்பியிருந்தார்.

Leave a Reply