Home > கவிதை > கவிஞர் முத்துகுமார் மகன் தந்தைக்கு எழுதிய வாழ்த்துப்பா

கவிஞர் முத்துகுமார் மகன் தந்தைக்கு எழுதிய வாழ்த்துப்பா

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன் அவருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் போற்றப்பட்ட பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் 45ஆவது பிறந்தநாள் ஜூலை 12 ரசிகர்கள் பலரும் அவரது நினைவாக சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மகன் ஆதவன், தன் தந்தையின் நினைவாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கத்தங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

-மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்

என்ற வரிகளுடன் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கவிதை நா.முத்துகுமார் ரசிகர்கள் அனைவரையும் மனமுருக செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றிய அவர் சீமான் இயக்கிய ‘வீரநடை’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.

‘மின்சார கண்ணா’ படத்தில் இடம்பெற்ற ‘உன் பேர் சொல்ல ஆசைதான்’, ‘வானத்தைப் போல’ படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ , ‘கஜினி’ படத்தில் இடம்பெற்ற ‘சுட்டும் விழி சுடரே’, ‘தங்கமீன்கள்’ படத்தில் தந்தையரின் அன்பை விளக்கிய ‘ஆனந்த யாழை மீட்டுகின்றாய்’, ‘சைவம்’ படத்தில் இசையாலும், வரிகளாலும் ரசிக்க வைத்த ‘அழகே அழகே’ என மனம்விட்டு மறையாத பல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு நா.முத்துகுமார் பரிசளித்தார்.

‘காதல்’, ‘7/G ரெயின்போ காலனி’, ‘அங்காடித்தெரு’, ‘மதராசப்பட்டினம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதி படத்தின் உணர்வை ரசிகர்களுக்குக் கடத்தப் பெரிதும் துணை நின்றார். அவரது திறமைக்கும், எழுத்துக்கும் அங்கீகாரமாக ஏராளமான விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. உணர்வுகள் வழியே ஊடுருவி உள்ளம் கவரும் அவரது கவிதைகளைக் கேட்க எதிர்பார்ப்புடன் காத்திருந்த பலரையும் ஏமாற்றும் விதமாக நா.முத்துகுமார் உடல்நலக்குறைவு காரணமாக 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி மரணமடைந்தார். இன்று(ஜூலை 12) அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

You may also like
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!
ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
பிறந்தநாள் அன்று அக்காவை நினைத்து உருகிய திருமா!
பாலசுப்ரமணிக்காக உருகிய இளையராஜா

Leave a Reply