Home > அரசியல் > அலங்கார பட்ஜெட்டில் முழுக்க முழுக்க பேன்கள்! தயாநிதிமாறன் கடும் தாக்கு!

அலங்கார பட்ஜெட்டில் முழுக்க முழுக்க பேன்கள்! தயாநிதிமாறன் கடும் தாக்கு!

இரண்டுமுறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் என்றாலும், அவருக்குள் இருந்த மிகச்சிறந்த பேச்சாளரை இப்போதுதான் தமிழகம் பார்க்கிறது. இதற்கு முன்னும் அவர் சரவெடியாக வெடித்திருக்கிறார் என்றாலும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அவருடைய அனாயசமான வார்த்தைப் பிரயோகங்கள் மக்களவையை அதிரவைத்தது.

நிதியமைச்சரையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் போட்டுத் தாக்கிய அவருடைய உரை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.  தனது உரையின் தொடக்கத்திலேயே கலைஞர் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழியைச் சொல்லி அவையை கவர்ந்தவர் உரை முடியும்வரை தனது அட்டாக்கை நிறுத்தவேயில்லை…

“மறைந்த   எங்கள்   தலைவர் கலைஞர்    அவர்களின்  வார்த்தைகளில்    இந்த    பட்ஜெட்டை விவரிக்க    வேண்டும்  என்றால், “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்.   உள்ளே   இருக்குமாம் ஈரும்,    பேனும்”.    அதாவது, அழகான பெண் ஒருவர் நீளமான கூந்தலில் பூச்சூடி வருவார். அவரை சற்று உற்றுப் பார்த்தால்தான் கூந்தலில் மொய்க்கும் பேன்கள் கண்ணுக்குத் தெரியும். பேன்களை ஆங்கிலத்தில் ‘லைஸ்’ என்று சொல்வார்கள். பொய்களையும் ஆங்கிலத்தில் ‘லைஸ்’ என்றே சொல்வார்கள்.

இந்த பட்ஜெட்டைஉற்றுப்  பார்த்தால்  அப்படித் தான் உள்ளது. பட்ஜெட்    தாக்கல்    செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி  செலுத்துவதற்கு  நடுத்தர வருவாய்  பெறும்  மக்கள்  ஆடிட்டரை  பார்க்க  செல்ல  வேண்டாம், ஒரு  கிளிக்  செய்தால்  போதும், எளிதாக  வரி  செலுத்தி  விடலாம் என  கூறினார்.   ஆனால், எந்த  பிரிவின்  கீழ் நாங்கள்  வரி செலுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளவே ஆடிட்டருக்கு    கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலைதான்  உள்ளது. 

புதிய  வரிமுறையை  எளிதாக விவரிக்க  வேண்டும்  என்றால், இப்போது 50 ரூபாய்க்கு விற்கும்  மசால்  தோசையின் விலை  புதிய வரி   விதிப்புக்குப்  ரூ.45 ஆகிறது.  ஆனால் இந்த விலை நிபந்தனைக்கு  உட்பட்டது  என்கிறார் நிதியமைச்சர். அதாவது, உங்களுக்கு  சாம்பார்  வேண்டும் என்றால் கூடுதலாக  ரூ.15, சட்னி வேண்டும்  என்றால்  கூடுதலாக ரூ.15  செலுத்த  வேண்டும்.  ஆக, ரூ.50க்கு     கிடைத்த     மசால்தோசையின்  தற்போதைய  விலைரூ.80.  இப்படித்தான் புதிய  பட்ஜெட் உள்ளது.

இந்திய மக்களின் ரத்தத்தில் சேமிப்பு என்ற விஷயம் ஊறிப்போயிருக்கிறது.  ஆனால்   சேமிப்பு வட்டியை 7 முதல் 8 சதவீதம் வரை குறைத்துள்ளது.  ஒரு  காலத்தில் 13 சதவீதம் வரை வட்டி அளிக்கப்பட்டது.   அதாவது,  மக்கள் பணத்தை செலவழிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். இன்னொரு  அபாயகரமான உண்மையை கூற விரும்புகிறேன். ஒருவர்  ரூ.15  ஆயிரம்  சம்பளம் பெற்றால்,  அவரது பாது காப்புக்கு பி.எப்   பங்களிப்பு   எடுக்கப்படுகிறது. இதற்கு வரி விலக்கு இருந்தது.  ஆனால்  புதிய  முறையில் இந்த  விலக்கு  இல்லை.  நான் தொழிலாளியாக   இருந்தால், பி.எப்.  பிடிக்க  வேண்டாம்.  சம்பளத்தை  உயர்த்துங்கள்  என்பேன். அமெரிக்கா  போன்ற  சமூக பாதுகாப்பு உள்ள நாட்டுக்கு இந்தமுறை   சரி.   நமது   அரசில்   அதுபோன்ற சமூக பாதுகாப்பு இல்லை. 

எல்லோரும் எல்.ஐ.சி. யில் முதலீடு செய்யத்தான்  தற்போது  விரும்புகின்றனர்.  ஏனென்றால் முதலீட்டு பணம் வட்டியுடன்  திரும்ப கிடைக்க  அரசு  உத்தரவாதம் இருக்கிறது. அதற்கு  வருமானவரி  விலக்கும் உள்ளது.   ஆனால்,   தற்போது எல்.ஐ.சி.  முதலீட்டுக்கு  ஒன்றும் கிடைக்காது  என  அரசு  கூறுகிறது.  உலகில்  எங்கும்  இரட்டை வரி முறை  இல்லை.  அரசு  ஏன் ஒற்றை  வரி முறையை  கொண்டு வரக் கூடாது.

“இயற்கை பேரிடர் ஏற்பட்டால், கிடைக்கும் ஒரே தொலைத்தொடர்பு  சேவை  பி.  எஸ்.என்.எல். ஏதா வது  பாதிப்பு  ஏற்பட் டால்  ஏர் இந்தியா  உள்ளது” என  நமது  அமைச்சர்கள்  பேசிய  விளம்பர ஒலிநாடாக்கள் உள்ளன.  சமீபத்தில் கூட  கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட  சீனா  சென்று இந்திய      மாணவர்களை  ஏர்  இந்தியா விமானங் கள்  மீட்டுவந்தன. ஆனால் அரசு தற்போது அவற்றை எல்லாம் விற் கிறது. இனி ஏதாவது  பாதிப்பு  ஏற்பட்டால் தனியார் விமானங்கள் செல்லுமா  அல்லது  ஜியோ தொலைத்தொடர்பு  சேவை  அளிக்குமா? எல்.ஐ.சி., ஏர் இந்தியாவை மட்டும் நிதியமைச்சர் விற்கவில்லை பி.எஸ்.என்.எல்.,  பி.பி.சி.எல். உட்பட  பல  நிறுவனங்களை  அரசு விற்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளையும்  அரசு விற்கிறது.  அதிக  வசூல்  செய்யும்மையங்களாக  நெடுஞ்சாலைகள் மாற்றப்படுகின்றன. நாடாளுமன்றக் கட்டிடத்தையும் விற்றுவிடுங்களே.

தற்போது  பங்குகளில்  முதலீடு செய்பவர்கள்  25  சதவீதம்  முதல் 30 சதவீதம்  வரை  ஈவுத்  தொகை வரி  செலுத்த  வேண்டியுள் ளது. நல்ல நிதியமைச்சராக இருந்தால், வீண்  செலவை  குறைக்க  வேண்டும்.  ஆதாருக்கு  ரூ.12  ஆயிரம் கோடி      செலவழிக்கப்பட்டது. எல்லா  தேவைகளுக்கும்  ஆதார் தேவை.  இறந்தால்  கூட  ஆதார் தேவை.  அதில்  முக்கிய  தகவல்கள்  அனைத்தும்  உள்ளன.  இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு  அரசு  ஏன்  ரூ.4,800 கோடி  செலவழிக்க  வேண்டும்.தேசிய   குடியுரிமை   பதிவு, தேசிய  மக்கள்தொகை  பதிவேடுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மாநிலம்    தமிழ்நாடு.    இதற்குஎதிராக  தி.மு.க.  தலைவர்  மு.க.ஸ்டாலின்  2.5  கோடி  கையெழுத்துக்களை   திரட்டி   ஜனாதிபதிக்கு  அனுப்பவுள்ளார்.  நீங்கள் நாட்டை துண்டாட முயற்சிக்கிறீர்கள்.

வருமான  வரி  அதிகாரிகளின் தொந்தரவு இருக்காது, வரிசெலுத்துவதில்  பாகுபாடு  இருக்காது  என  நிதியமைச்சர்  கூறுகிறார்.   ஆனால்   தமிழ்நாட்டில் என்ன    நடக்கிறது?    அடுத்த ஆண்டு   தேர்தல்   வரவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.1 கோடி வரி  நிவாரணம்  கிடைக்கிறது. அதேசமயம் முகம்   இல்லாத   உங்கள்   வரி அலுவலகம்,   நடிகர்   விஜய்க்கு குறி வைக்கிறது. சூட்டிங் நடக்கும் இடத்தில் இருந்து அவர் அழைத்துச்           செல்லப்பட்டு விசாரிக்கப்படுகிறார். 
விவசாயிகளின்  வருவாயை இரட்டிப்பு  ஆக்குவோம்  என்கிறீர்கள். ஆனால் நாட்டில் 35 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  விவசாயிகள் தற்கொலை  செய்துள்ளனர்.  அனுமதிக்கப்பட்ட    எய்ம்ஸ் மருத்துவமனைகளில்,  இன்னும் ஒன்று  கூட  வரவில்லை.  எந்தப் பணியும் தொடங்கவில்லை. தமிழ்மொழியை  பற்றி  நீங்கள்  பேசுகிறீர்கள். திருக்குறளை கூறுகிறீர்கள். திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தீர்களா? இல்லையே. தமிழுக்காக நீங்கள் என்ன  செய்தீர்கள். செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்துக்கு  கோடிக்கணக்கில்  பணம் செலவழிக்கப்படுகிறது.  ஆனால் செம்மொழி தமிழுக்கு எதுவும் செலவழிக்கப்படவில்லை” என்ற அவருடைய அதிரடி உரை மக்களவையை உலுக்கவே செய்தது.

Leave a Reply