Home > அரசியல் > இதுக்கு எதுக்கு தேர்தல் நடத்தனும்? திமுக உள்கட்சி தேர்தல் மோசடிகள்!

இதுக்கு எதுக்கு தேர்தல் நடத்தனும்? திமுக உள்கட்சி தேர்தல் மோசடிகள்!

ஒரு காலத்தில் அமைப்புத் தேர்தலில் ஜனநாயகத்தை கடைப்பிடித்து உழைக்கிற உண்மையான கட்சிக்காரனுக்கு அங்கீகாரத்தை கொடுத்தது திமுக. பிறகு அந்தத் தேர்தலிலும் ஆள்தூக்கும் அரசியல் தலைதூக்கியது.

பிறகு சாதிப்பகை புகுந்தது. பண ஆதிக்கம் தலைவிரித்தாடியது.  அதன்விளைவாக தேர்தலில் கொலை விழும் அளவுக்கு வெறித்தனம் வளர்ந்தது. அதையடுத்து இயன்றவரை போட்டியின்றி நிர்வாகிகளை தேர்வு செய்யும்படி திமுக தலைமை அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து மாவட்டச் செயலாளர்களும் ஒன்றியச் செயலாளர்களுமே தேர்தல்களை தீர்மானித்தார்கள்.

அதாவது, ஒருவருடைய கட்சிப்பணியை விமர்சித்தும், அவருடைய அரசியல் செயல்பாடுகளை குற்றம்சாட்டியும் தேர்தலை சந்தித்த திமுகவினர், இப்போது, தங்கள் பொறுப்பை தக்கவைப்பதற்காக தங்களுக்கு வேண்டிய ஆட்களை பொறுப்புகளில் நியமித்துக் கொள்ளும் போக்கு அதிகரித்தது.

ஆனால், திமுகவின் சட்டப்பேரவை தேர்தல் வியூகத்தை வகுக்கும் பிரசாந்த் கிஷோர் டீம் வந்தபிறகு, கட்சியின்  தேர்தல்களும் முறைப்படுத்தப்படும் என்று கருதப்பட்டது.

அதாவது, பல காலமாக புதியவர்களுக்கு வழிவிடாமல், கட்சி வளர்ச்சியிலும் அக்கறையில்லாத ஆட்களுக்கு பொறுப்புகள் மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றபடி கட்சிப்பொறுப்புகள் அனைத்துத் தரப்பினருக்கும் பிரித்து வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், அப்படியெல்லாம் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது பல மாவட்டங்களில் நடைபெற்றுள்ள ஒன்றியக்கழக தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஒன்றியங்களிலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சாலவாக்கம், மதுராந்தகம் வடக்கு ஒன்றியங்களிலும் தேர்தலே நடத்தாமல் அனைத்து நடவடிக்கைகளும் ரகசியமாகவே நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

வேடிக்கை என்னவென்றால் ஊராட்சிக் கிளைக்கழக செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பவருக்கே அந்த விஷயம் தெரியாது என்ற அளவுக்கு ரகசியமாக முடிந்திருக்கிறதாம்.

அதாவது, கிளைப்பொறுப்புக்கான நிர்வாகிகளையும், அவர்களை பரிந்துரை செய்யும் உறுப்பினர்களையும் ஒன்றியச்செயலாளரே முடிவு செய்கிறார். அவர்களுடைய கையெழுத்துக்களையே போலியாக போடுகிறார். பின்னர் பட்டியலை அனுப்பிவிடுகிறார் என்கிறார்கள்.

இதுவரை ஒரு ஊராட்சிக்கு ஒரு கிளை என்று இருந்தது. ஆனால், இப்போது ஒரு ஊராட்சிக்கு உட்பட்டு எத்தனை கிராமங்கள் இருக்கின்றனவோ அத்தனை ஊர்களிலும் பொதுக்கிளை மற்றும் தலித்துகளுக்கான கிளை என்று உருவாக்கிக் கொள்ள அனுமதித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கிற ஒன்றியச் செயலாளர்கள் தங்கள் பொறுப்பை தக்கவைப்பதற்காக தங்களுக்கு வேண்டிய ஆட்களை பொறுப்புக்கு நியமித்து, அதை தேர்தல் மூலம் தேர்வு செய்ததாக தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்புவதாக அறிவாலயத்துக்கு புகார்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான கிளைகள் இப்படித்தான் முடிவு செய்யப்படுவதாக எதிரணியினர் புலம்பி வருகிறார்கள். கட்சியின் கீழ்மட்ட அமைப்புகளை சரிசெய்யாத வரை எத்தனை பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்தாலும் பிரயோஜனமில்லை என்று கவலை தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply