Home > அரசியல் > ஈகோ பார்க்காமல் ஏழைகளின் வயிற்றுக்கு உதவுமா மோடி அரசு?

ஈகோ பார்க்காமல் ஏழைகளின் வயிற்றுக்கு உதவுமா மோடி அரசு?

முன்னாள் நிதிமைச்சர் ப. சிதம்பரம் சொல்லி இருக்கும் கருத்து முக்கியமானது. வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்களுக்கு, தலா ரூ.5,000 கொடுத்தால், ரூ. 65,000 கோடிகள் செலவாகும். அதை தரவேண்டும் என்கிறார். அது 13 கோடி குடும்பங்களுக்கு போகலாம். சராசரியாக 3 (அ) 4 பேர்கள் இருக்கும் ஒரு குடும்பம் என்று வைத்து கொண்டால், இந்த ரூ.5,000, 39 – 52 கோடி வயிறுகளை காப்பாற்றும். அது மொத்த இந்திய மக்கள்தொகையில் சற்றேறக் குறைய 30-35%.

இதையே சற்று மாற்றி நிதியமைச்சரின் 1.7 இலட்சம் கோடிகள் கேள்விகளில், 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயர் கொடுத்துள்ள அத்தனை பேருக்கும் ரூ. 7,000 வரை இடைக்கால நிவாரணமாக, கடனாக கூட கொடுங்கள் என்று எழுதி இருந்தேன்.

நிர்வாக திறமையின்மையால், ஏற்பட்ட பற்றாக்குறையினை போக்க, ரிசர்வ் வங்கி பாலன்ஸ் ஷீட்டில் கைவைத்து 1.75 இலட்சம் கோடிகள் உருவிய அரசு, இப்போதைக்கு நம்முடைய அன்னிய ரிசர்வில் கை வைக்க முடியும்.

USDINR ரூ. 76னினை தாண்டி ஓடி கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 10, 2020 கணக்கு படி ரிசர்வ் வங்கி $439 பில்லியன் டாலர்களை அன்னிய ரிசர்வ் முதலீடாக வைத்திருக்கிறது. ஏற்கனவே சர்வதேச நிதி முனையமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் $3.2 பில்லியன் டாலர்கள் பணம் தர ஒப்பு கொண்டு இருக்கிறார்கள்.

USDINR = 75 என்று வைத்து கொண்டால் கூட, $1 பில்லியன் டாலர்கள் = ரூ. 7,500 கோடிகள்.

அன்னிய ரிசர்விலிருந்து $15-20 பில்லியன் டாலர்களை உருவினால், நாடு சரிந்து போகாது. அது நமக்கு ரூ. 112,500 – 150,000 இலட்சம் கோடிகளை தரும். ஏற்கனவே ரிசர்வ் வங்கி 3 இலட்சம் கோடிகள் வரை வங்கிகளுக்கான liquidityயை உருவாக்கி கொடுத்து இருக்கிறது. எல்லாவற்றும் ஜெய் மோடி என்று கூப்பாடு போடும் ஏராளமான NRI பக்த கோடிகள் இருக்கிறார்கள். India Stimulus Bond என்று ஒரு அறிவித்து, 5% வரைக்கும் வட்டி தருகிறோம், 5 ஆண்டுகால லாக்-இன் என்று சொன்னால், இந்த பக்தாள் கும்பல் பணம் போடும். அதில் நம்மால் இன்னும் $1 – 2 பில்லியன் டாலர்களை தேற்ற முடியும்.

பிஸ்கல் டிபிசிட்டினை எந்த நிதியமைச்சர்களும் மதிக்கவில்லை. இப்போது நிர்மலா சீதாராமன் 3.5%க்குள் வைத்து கொள்வோம் என்று படம் காட்டினாலும், off-balance sheetல் வாங்கிய பணம் ஏராளம். இதை CAG இந்திய பற்றாற்குறை 5% வரை இருக்கலாம் என்று ஏற்கனவே சொல்லி விட்டது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு? நாம் நம் பற்றாற்குறையினை 2-2.5% ஏற்றுவோம். எல்லா நாடுகளும் ஏற்றி விட்டன. அதை அங்கிங்கு நகர்த்தினால் அதில் ஒரு $15 – 20 பில்லியன் டாலர்கள் தேறும்.

இது தாண்டி, இந்திய பெருநிறுவனங்களின் பாலன்ஸ் ஷீட்டில் ஏகப்பட்ட பணம் அனாமத்தாக இருக்கிறது. அதையும் ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்தி கொள்ளலாம். PM Cares என்று பிச்சை எடுப்பதற்கு இது ஒரு வகையில் பெட்டர் + win-win.

இந்தியாவே ஊரடங்கில் இருந்த போதும், பங்கு சந்தைகள் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளை 48,000 கோடிகள் மதிப்புள்ள பங்குகள் NSEயில் மாற்றப்படுகின்றன (மார்ச் 2020 புள்ளிவிவரம்). ஒரு சராசரி tradeன் மதிப்பு ரூ. 24,065. ஏற்கனவே அவர்கள் STT எல்லாம் கட்டி கொண்டு தான் இருக்கிறார்கள். சராசரி சந்தை ட்ரேட் மதிப்பில் 0.001% கூடுதலாக பிடியுங்கள். அது ரூ.25னினை அரசுக்கு தரும். மேற் சொன்ன கணக்கில் தினமும் 2 கோடி ட்ரேட் நடக்கிறது. 2 கோடி x 25 = 50 கோடிகள். மாதத்திற்கு 20 நாட்கள் சந்தை என்று வைத்து கொண்டால், இதன் வழியாக 1,000 கோடிகள் வரும். இது NSEயில் மட்டும். BSE தனி. இதை அடுத்த 2 வருடங்கள் நீட்டித்தால், இதிலிருந்து 25,000 கோடிகள் தேற்ற முடியும். மற்ற படி செலவுகளை குறைத்து, வெட்டி பந்தா திட்டங்களை எல்லாம் தள்ளி போட்டால் அதில் ஒரு ரூ. 100,000 கோடிகள் சேமிக்கலாம்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தினால், நமக்கு தேவையான 25 – 30 இலட்சம் கோடிகளை அடுத்த 3 மாதத்தில் சேர்த்து விடலாம். அந்த பணத்தை மக்களின், சிறு, குறு, சிறிய, பெரு நிறுவனங்களின் மீட்பிற்காக செலவு செய்தால், இந்த கடினகாலங்களை எல்லாம் தாண்டி, அடுத்த 18-24 மாதங்களில் மேலே வந்து விடலாம்.

இப்போதை இதை செய்யாமல் விட்டால், பட்டினி சாவுகளும், பெரும் வேலை வாய்ப்பின்மையும், ஏகப்பட்ட நிறுவன மூடல்களும் நடக்கும். அதை கையாள கூடிய சக்தியும், தெம்பும், திறமையும் மோடி அரசிற்கு கிடையாது.

பெருஞ்சிக்கல்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே மழைக்காலத்திற்கான சேமிப்பினை துவங்குவது தான் புத்திசாலிகளின் வழக்கம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

#narain_rajagopalan #covid-19 #p.chidambaram

You may also like
தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்
ஆர்எஸ்எஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? – Vinayaga Murugan
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
தமிழகம் வட மாநிலத்தவரின் வேட்டைக்காடாக வேண்டுமா? ஒரே ஒரு உதாரணம்!

Leave a Reply