Home > அரசியல் > ஒரு கலைந்த கனவு!

காலை, வழக்கம்போல் டீ கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ரஜினி ரசிகர் ஒருவரைப் பார்த்தேன். இரவு குடித்திருப்பார் போலிருக்கிறது. முகம் வீங்கியிருந்தது.
சமீப காலமாக அவரிடம் நிறைய மாற்றங்கள். வயது 57 இருக்கலாம் .

‘டை’ அடிக்கத் தொடங்கியிருந்தார். நான்கு செட் மினிஸ்டர் காட்டன் வேட்டி சட்டைகள் வாங்கி வைத்திருந்தார்.

ஒரு second hand கார் வாங்கியிருந்தார். நகர ரசிகர் மன்றத்தில் ஏதோ ஒரு பொறுப்பில் இருந்தார். சமீப காலமாக  சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில், ரஜினிகாந்தின் படத்தை வைத்திருந்தார்.

‘பாபா’ ரிலீஸான சமயம் . படப் பெட்டியை ஊர்வலமாக எடுத்து வந்தவர்களில் இவரும் ஒருவர். இடையில் நுழைந்த பா.ம.க வினர் படப்பெட்டியை தூக்கிப்போய் எங்கோ முந்திரிக் காட்டில் வீசிவிட்டார்கள்.

ரசிகர் செய்வதறியாது திகைத்தார். அழுதார். அன்றுதான் அரசியல் எப்படிப்பட்டது? என்று ரசிகருக்கு தெரிந்தது.

என்ன தலைவர் இப்படி பின்வாங்கிவிட்டாரே? என்றேன். எங்களூரில் எத்தனை கெட்ட வார்த்தைகள் உண்டோ அத்தனையும் ரசிகர் மூலம் அறிந்து கொண்டேன்.
ஒரு ஆறுதல் அறிக்கையில்

தீர்ந்துவிடுவதில்லை ரசிகன் அடைந்த ஏமாற்றம்! என உணர முடிந்தது.

‘யாருக்கு சார், உடம்பு நல்லாயிருக்கு? எனக்கு சுகர் இருக்கு. பிபி இருக்கு. ரெண்டு முறை கொரோனா பாசிட்டிவ்.

வியாபாரத்துல நிறைய நஷ்டம். அதோடதான் சார் ‘ இப்போ இல்லாட்டி எப்பவும் இல்லன்னு!’ போஸ்ட்டர் ஒட்டினோம். என்றார். கெட்ட வார்த்தைகள் முடிந்து விட்டது,  என நினைத்து தவறு. மேலும் சில வார்த்தைகளை உதிர்த்தார்.

இந்தமுறை அவ்வார்த்தைகள் தமிழருவி மணியனுக்கு உரியவையாக இருந்தன! உச்ச நட்சத்திரங்களால் ரசிகர்களைதான் உருவாக்க முடியும். தொண்டர்களை அல்ல! என்பதை உணர்ந்த தருணம் அது.

எத்தனையோ தோல்விகளை தொண்டனுக்கு கொடுத்தவர் கலைஞர். ஒரு தொண்டன்கூட கலைஞரை மனம் கசந்து திட்டியதை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

அந்தத் தொண்டனை ஏமாற்றி விடக்கூடாது, என்றுதான் நடக்க சிரமப்பட்டபோதும் சக்கர நாற்காலியில் நகர்ந்தபடி தமிழகத்தின் அரசியலை நகர்த்தினார் கலைஞர்.

தன் தொண்டனுக்கு சிறையையும் , சமூகத்தின் வசவுகளையும் வாங்கித்தந்தவர் பெரியார். பெரியாரால் தமிழ்ச்சமூகம் பயனடைந்தது. அவர் தொண்டனுக்கு எந்த பயனுமில்லை. பெரியார் மீது வீசிய அழுகிய முட்டை தொண்டன் மீது உடைந்து ஒழுகியது.

தன் தலைவன் மீது விழவில்லையே!  என மகிழ்ந்தவனே பெரியார் தொண்டன்.

எம்ஜிஆரை ப்ரூக்ளின் ஹாஸ்பிடலில் சென்று பார்த்தார் , கூட நடித்த மஞ்சுளா. நீங்கள் யார் நர்ஸா? என்றார் எம்ஜிஆர். நினைவு தப்பிய நிலையில் தலைவர் இருந்தாலும் நம்பிக்கையோடு ஆண்டிப்பட்டியில் அவருக்கு ஓட்டு போட்டான் தொண்டான்.  ரசிகன் வேறு. தொண்டன் வேறு!

நடிகர்கள், ரசிகர்களால் உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை அடைகிறார்கள். அரிசியல்வாதிகள் தொண்டர்களால், மக்களால் தலைவர் எனும் தகுதியை அடைகிறார்கள்.

அரசியலுக்கு வருகிறேன். மக்களுக்கு சேவை செய்ய வருகிகிறேன்.
எனக்கூறி வந்த எந்த தலைவரும்,

எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லை! எனப் புலம்பியது இல்லை.
அவர்கள் தங்கள் தேசம், மக்கள், அவர்கள் வாழ்வு, பண்பாடு, மொழி நலிவடைந்துவிடக் கூடாது!
என்பதற்காக தங்கள் உடல் நலிவைப் பொருட்படுத்தியதில்லை.
போராடினார்கள்.

2006 காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

அப்போது வி.பி.சிங்குக்கு ரத்தப்புற்று நோய். அரசியலில் ஒதுங்கியிருந்த அவர் ஜன்மோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கியிருந்த நேரம். வி. பி. சிங், தன் தள்ளாத உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் மக்களை இணைத்துப் போராடி ரிலையன்ஸை ஓட விட்டார்.

அண்ணாவுக்கு புற்றுநோய். வைத்தியம் செய்து கொள்ள அமெரிக்கா போகிறார், என்றதும், தான் வளர்த்த பிள்ளையாயிற்றே! என்கிற பற்றில் , விமான நிலையத்துக்குப் போய் அண்ணாவைப் பார்க்க ஆசைப்பட்டார் பெரியார்.

விமானம் புறப்பட்டிருக்கும் என்றார்கள். அவர் பயணிக்கும் விமானத்தையாவது பார்ப்போம் வாருங்கள். ஓடினார் பெரியார். விமானத்தில் ஏறிய அண்ணா பெரியாரைப் பார்த்து ஓடிவந்தார்.
இருவர் கண்களிலும் நீர்வழிந்தது.

சிகிச்சை முடிந்து திரும்பினார் அண்ணா. அவர் உடுப்புகள் தொளதொளவென்று இருந்தன. அண்ணா இப்படி துறும்பாய் இளைத்துவிட்டாரே! கலங்கினார் பெரியார்.
தம் இனத்தின் மீதான பற்றால், புற்று நோய்கண்டு அஞ்சாதவர் அண்ணா!

பெரியாருக்கு குடலிறக்கம். தள்ளாத வயதில் பலவித தயக்கங்களுக்குப் பிறகு, வேலூரில் அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் வகையில், உடலில் ஓட்டை போடப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்தக் குழாயை மாற்ற வேண்டும். சிறுநீர் வடியும் வாளியை பெரியாரே சுத்தப்படுத்துவார்.

இந்த உபாதையோடு கூட்டங்களில் பேசினார். இடையில் குழாய் விலகும். வலியில் உயிர்போகும். பேச்சின் இடையே ‘அம்மா!’ என்று அலறுவார் பெரியார்.

மூத்திர சட்டி சுமந்து, படுத்தபடி பேசினார் பெரியார். எதற்காக? தமிழ்ச் சமூகத்தின் சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதற்காக!  இந்த சமூகத்தை வறுமை , வேலையின்மை, தனியார்மயம், விளை பொருளுக்கு உரிய விலை இல்லாமை, சூழல் அழிப்பு, காசுக்கு விற்கப்படும் கல்வி என மோசமான நோய்கள் பீடித்திருக்கின்றன.

இதற்குமுன் எந்த தலைவனும் தன் நோயைப் பொருட்படுத்த மாட்டான். ஸ்டாலினுக்கு ஆயிரம் உடலநலப் பிரச்சனைகள் இருக்கின்றன.

எடப்பாடி மந்திரி சபையில் பாதிபேர் சுகர், பிபி மாத்திரை போடுபவர்களே! சோனியாவுக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சிறையில் நோயோடு போராடுகிறார் லாலு பிரசாத்.

ஆரோக்கியத்தோடுதான் அரசியல் செய்வது, என்றால் ஜிம் டிரெய்னர்கள்தாம் அரசியல் தலைவர்களாக முடியும்.

மிகக்குறுகிய காலத்தில் , குறுகிய உழைப்பில், இளம் வயதில் ரஜினியிடம் சேர்ந்தது பணம். சமூகம், கலை, அரசியல் , மக்கள் குறிந்த சிந்தனை இல்லாத மனிதரிடம் சேரும் பணம் அவரை சீரழிக்கும். ரஜினிக்கும் இதுதான் நிகழ்ந்தது.

மது ,சிகரெட் என சீரழிந்து கடைசியாக,மன அமைதிக்காக,  இவர்கள் புகலடைவது பாபா, ரவிசங்கர், நித்தியானந்தா, ஜக்கி போன்ற ஸ்டார் ஹோட்டல் சாமியார்களை.

இதைத்தான் ஆன்மீக அரசியல்! என்கிறார்கள். தேவைக்கு அதிகம் சம்பாதிப்பவர்கள் மீது மக்களுக்கு கோபம் வரும். இந்தக் கோபத்தை தணிப்பதைதான்  ‘Corporate Social Responsibility’ என்கிறார்கள்.

தையல் மெஷின் கொடுப்பது, சலவை இயந்திரம் தருவது, போர்வை கொடுப்பது, பிரட் கொடுப்பது! இதைதான் நடிகர்கள் ‘மக்கள் சேவை’ என ரசிகர்களை நம்ப வைக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுவது, நீட்டுக்காக போராடுவது, விளை நிலங்களில் மீத்தேன் எடுக்காதே எனப் போராடுவது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே எனப் போராடுவது, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து போராடுவது! என்பதுதான் உண்மையான மக்கள் சேவை.

இதை ரஜினியாலோ, ரசிகர்களாலோ ஒருபோதும் செய்ய முடியாது.

பாவம் ரஜினி ரசிகர்கள். வழக்கமாக ரஜினிக்கு கட் அவுட் வைப்பார்கள்.  பால் ஊற்றுவார்கள். இந்தமுறை வழக்கத்துக்கு மாறாக ரஜினியே பாலூற்றிவிட்டார். ரசிகர்களுக்கு!

கவிஞர் கரிகாலன்

Leave a Reply