Home > அரசியல் > முன்னோடும் பிள்ளை திமுக!

முன்னோடும் பிள்ளை திமுக!

கொரோனா வைரஸுக்கு அஞ்சி இரண்டு நாட்கள்கூட முழுமையாக வீட்டுக்குள் அடைந்து கிடக்க முடியவில்லை. ஆனால், காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதிமுதல் 8 மாதங்களாக மக்கள் அனைவரும் எப்படித்தான் வீட்டுக்குள் இருக்கிறார்களோ தெரியவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள இந்தியா முழுக்க ஊரடங்கை அறிவிக்கிறார் பிரதமர். ஆனால், அன்றைக்கு இரவே உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்தியநாத், ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் சிலையை வைத்து பூஜை நடத்துகிறார்.

மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் தங்கியிருக்க வேண்டும், சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று, பாஜக பிரதமர் சொன்னதை அந்தக் கட்சியைச் சேர்ந்த முதல்வர் முதல்நாளே மீறுகிறார்.

கொரோனா சீனாவை மிரட்டிக் கொண்டிருந்த வேளையிலேயே உலகம் பதறத் தொடங்கியிருந்தது. ஆனால், அந்தப் பதற்றத்தை கண்டுகொள்ளாமல், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் குறியாக இருந்தது பாஜக அரசு.

கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள பசுமாட்டு சாணமும், கோமியமும் நல்ல மருந்து என்று, பாஜக தலைவர்களே பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தனர். நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கவே வணக்கம் சொல்லும் முறையை இந்து மதம் அமல்படுத்தியதாகவும் அவர்கள் பெருமையடிக்க தொடங்கினார்கள்.

ஒருபக்கம் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்த நிலையிலும், பிப்ரவரி மாதமே, கொரோனா நோய்த் தடுப்பு முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று, ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அப்போது அவரை பாஜக தலைவர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள். மார்ச் மாதம் 12 ஆம் தேதி, நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை சமாளிக்க திட்டமிட வேண்டும் என்று, ராகுல் மீண்டும் வலியுறுத்தினார்.

அதையும் பாஜக தலைவர்கள் மிக வக்கிரமாக விமர்சனம் செய்தார்கள். சோனியா குடும்பத்துக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று, சோதனை நடத்த வேண்டும் என்று ஒரு பாஜக தலைவர் கூறினார்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களை முறைப்படி சோதனை நடத்தாமல் விட்டுவிட்டு, சோனியா குடும்பத்தை சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இப்போது, மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஊரடங்கு அறிவித்திருக்கிறார்.

இப்படித்தான், தமிழகத்திலும் சட்டமன்றக் கூட்டத்தொடரை முடித்துவிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்றும், நோய்த் தொற்றை சமாளிக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்திருக்கிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

பொறுத்துப் பார்த்த திமுக தலைவர் ஒருகட்டத்தில் பொறுமையிழந்தார். திமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்தே சட்டமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க அதிமுக அரசு முடிவு செய்தது.

ஆனால், தமிழக அரசு முடிவு செய்வதற்கு முன்பாகவே, பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு அறிவித்தார். கொரோனா நோய்த் தொற்றை மகாமாரி என்று மிகக் கடுமையாக வர்ணித்தார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று தமிழக மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் 70க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மார்ச் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தார் மோடி.

மோடி அறிவித்த மறுநாள், சட்டமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மார்ச் 31 ஆம் தேதிவரை வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அவர் அறிவித்த மறுநாள், இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடியும் பிரகடனம் செய்தார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், வீட்டுக்குள் முடங்கும் மக்களுக்கு மாநில அரசும், மத்திய அரசும் அறிவித்திருக்கிற நிவாரண உதவிகள் போதாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருக்கின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் மும்மடங்கு அதிகரித்துவிட்டன. ஆனால், தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயை இழப்பீடாக அறிவித்தது தமிழக அரசு. மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணமும் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில், மிகக் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், கொரோனா இல்லையென்று அறிவித்த மத்திய அரசும், நோய்த் தொற்றை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக அறிவித்த மாநில அரசும், மருத்துவர்களுக்குத் தேவையான முகக்கவசங்களைக் கூட தர முடியாத நிலையில்தான் இருக்கின்றன.

கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளையும், என்.95 முகக்கவசங்களையும் கூட வழங்கமுடியவில்லை.

நிலைமையின் தீவிரத்தை அறிந்த மதுரை மக்களவைத் தொகுதி சிபிஎம் உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 55 லட்சம் ரூபாயை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வழங்கினார். அதுமட்டுமின்றி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழக அரசு கொள்முதல் செய்த மருத்துவ உபகரணங்கள் குறித்த விபரங்களை வெளியிடும்படி கோரி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதி நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கும்படி கூறினார். அவருடைய உத்தரவைத் தொடர்ந்து தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார், தர்மபுரி மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார்.

அதுமட்டுமின்றி, தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி ஒருவர், எந்த அடிப்படையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன், நோய்த் தொற்றுக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்ட 149 பேரில் 73 பேர் மட்டுமே மருத்துவமனையில் இருப்பதாகவும், மீதமுள்ள 76 பேர் எங்கிருக்கிறார்கள் என்றும் கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கொரோனா நோய்த்தொற்று குறித்து தமிழக அரசு வெளிப்படையான கணக்கை வெளியிடவில்லை என்று கூறப்படும் நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதி நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கியுள்ளனர். இதுதவிர, தங்கள் ஒருமாத சம்பளத்தையும் அமைப்புசார தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.

ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைகளுக்காக திமுக எப்போதும் முன்னோடும் பிள்ளையாக செயல்படும் என்று மறைந்த தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவார். அவருடைய பிள்ளையும் அதையே பின்பற்றுகிறார்.

You may also like
சீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு?
தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!
உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!
திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!

Leave a Reply