Home > அரசியல் > கொந்தளிக்கும் இந்தியாவின் மறுபக்கம்!

கொந்தளிக்கும் இந்தியாவின் மறுபக்கம்!

“இன்று இரவு 12 மணியோடு ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் வெறும் காகிதம்தான். கருப்புப் பணத்தையும் தீவிரவாதத்தையும் ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது” என்றார் மோடி. அது 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி.

அதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் தங்கள் பணத்தை எடுப்பதற்கே வேலையை விட்டு ஏடிஎம் வாசல்களில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஆனால், அச்சடிக்கப்பட்ட புத்தம்புது நோட்டுகள் வாசம் மாறாமல் கோடீஸ்வரர்களின் குடோன்களில் நிரப்பப்பட்டன.

பிரதமர் மோடியின் அந்த அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் மிகக் கொடூரமான நெருக்கடியில் 35 கோடிக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவில் 2019 டிசம்பர் 31ல் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸின் தீவிரம் உடனடியாக உலகம் முழுவதும் தெரியவந்தது. சீனா, வூஹான் மாகாணத்தையே அடைத்துவிட்டது. அந்த அளவுக்கு நோயின் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.

அடுத்து ஜனவரி 20 ஆம் தேதி தென்கொரியாவில் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அந்த நாடு, உடனடியாக நோயாளிகளைத் தனிமைப்படுத்தி நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. சீனாவிலிருந்தும் தென்கொரியாவில் இருந்தும் இந்தியாவுக்கு பலர் திரும்பத் தொடங்கினர்.

சீனாவிலிருந்து கேரளா வந்த சில மாணவர்களிடம் கொரோனா வைரஸ் இருப்பது ஜனவரி 30 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அந்த மாநிலத்தை தனிமைப்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளையும் நிவாரண உதவிகளையும் முதல்வர் பினராயி விஜயன் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்.

நோய்த் தொற்று கண்டறியப்பட்டவுடனேயே, ராகுல் காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தினார். ஆனால், வழக்கம்போலவே, ராகுல் காந்தியை கிண்டல் செய்வதிலேயே பாஜக தலைவர்கள் இன்பம் அனுபவித்தார்கள்.

அவர்களுடைய கவனம் முழுவதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணத்துக்கான வரவேற்பு ஏற்பாடுகளை கவனிப்பதிலும், குஜராத்தில் அவர் பயணம் செய்யும் சாலை ஓரத்தில் இருக்கும் குடிசைவீடுகளை மறைத்து சுவர் எழுப்புவதிலுமே இருந்தது.

பிப்ரவரி 25 ஆம் தேதி ட்ரம்ப் வந்து போனவுடன், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ.க்களை கடத்தும் வேலையில் கவனமாகிவிட்டார்கள்.

அவர்கள் தன்னை கிண்டல் செய்தாலும், மோடி அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து ராகுல் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் சோதனை செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தாலும், மார்ச் 12 ஆம் தேதி கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

உடனே, ஏப்ரல் 15 ஆம் தேதிவரை இந்தியாவுக்கு வெளிநாட்டு விமானங்கள் வருவதற்கு மத்திய அரசு தடைவிதித்தது. மகாராஸ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அப்போதும் மத்திய அரசு நிலைமையின் தீவிரத்தை மக்களுக்கு அறிவுறுத்த தவறிவிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு பரிசீலிக்கவே இல்லை. எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்கும் போக்கு மோடி அரசுக்கு இல்லவே இல்லை. எதையும் தானடித்த மூப்பாக செய்வதே மோடியின் வழக்கமாகிவிட்டிருந்தது.

அந்த வகையில்தான் மார்ச் 24 ஆம் தேதி எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் திடீரென்று இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவித்தார் மோடி. இந்த ஊரடங்கால் யாரெல்லாம் எப்படிப்பட்ட பாதிப்புகளைச் சந்திப்பார்கள் என்ற முன்யோசனையே இல்லாமல் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் வேலைதேடி சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அவகாசம் தரவேண்டும் என்ற சிந்தனையே பிரதமருக்கு இல்லை. வெளிமாநிலங்களுக்குச் சென்றவர்கள் அங்கு சகல வசதிகளோடு இருப்பதாக பிரதமர் எப்படி முடிவு செய்தார் தெரியவில்லை.

சுமார் 35 கோடி மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக வாழும் நாட்டில், சுமார் 40 கோடி மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு வீடு வசதிகூட இல்லாத நிலையில் அவர்களுக்கு எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் அவசரகதியில் பிரதமரின் ஊரடங்கு அமைந்திருந்தது.

எனவேதான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மூன்று நாட்கள் முடிவதற்குள், தலைநகர் டெல்லியிலேயே வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் உணவுக்காக மறியலில் ஈடுபடும் நிலை உருவானது. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களிலும், தமிழகத்தில் கோவை உள்ளிட்ட நகரங்களிலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவுக்காக போராடும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மக்களுக்கு ட்வீட் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாம் ஒன்றுபட்டு இந்த தொற்று நோயை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது என்று கூறினார். அவருடைய இந்த ட்வீட் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்திய மக்களை மத அடிப்படையில் பிரித்து தனிமைப்படுத்த குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியே தீருவேன் என்று அறிவித்தவர் அமித்ஷா. இப்போது, ஒன்றுபட்டு நிற்போம் என்பது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதுபோலவே, தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, ட்வீட் செய்த பிரதமர் மோடியும், தனது முடிவு சிரமங்களை ஏற்படுத்தினாலும், இந்த தொற்று நோயை எதிர்கொள்ள வேறு வழியில்லை என்று கூறியிருந்தார்.

நிலைமையின் தீவிரத்தைத் தொடர்ந்து, ராணுவத்தைக் கொண்டு முக்கியமான பகுதிகளில் சமையல் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் பீதியடையத் தேவையில்லை என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்தியநாத் கூறினார். ஆனாலும் டெல்லியிலும், லக்னோவிலும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க போதுமான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இப்போது மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த அக்கறையை ஊரடங்கு அமல்படுத்திய தொடக்க நாட்களிலேயே அரசுகள் கவனமாக செய்திருக்க வேண்டும். மக்களை அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப போதுமான கால அவகாசத்தை கொடுத்திருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

பிரதமர் மோடியின் ட்வீட்டைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். “மற்ற நாடுகளைப் போல இந்தியா இல்லை. நமது மக்கள் தொகை வேறுபட்டது. கோடிக்கணக்கான முதியவர்கள் நமது கிராமங்களில் இருக்கிறார்கள். வேலையற்ற இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறார்கள். திடீரென்று நாட்டின் பொருளாதார எந்திரத்தை முடக்கிவிட்டால் ஏற்படும் பாதிப்புகளை அரசு திட்டமிட்டிருக்க வேண்டு. இப்போதும்கூட அடுத்த சில மாதங்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த, அவர்களுடைய வங்கிக்கணக்கில் போதுமான பணம் செலுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சனையை நுணுக்கமாக அணுக வேண்டியிருப்பதாலம், அரசுடன் முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் யெச்சூரி, “மத்திய அரசு தனது மேலாதிக்கத்தை காட்டவே விரும்புகிறது. மாநில அரசுகள் கேட்கும் உதவிகளை செய்யாமல், அவற்றின் கைகளை கட்டிப்போட்டிருக்கிறது. தினமும் நோய்ப் பரவல் நிலையை நாட்டுக்கு அறிவிக்க வேண்டிய மத்திய தகவல்துறை அமைச்சர் ஜவடேகர், 1980களில் தூர்தர்ஷனில் வெளிவந்த ராமாயணம் தொடரைப் பார்த்துக்கொண்டு, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். இதுதான் அமைச்சர்களின் நிலை. மத்திய அமைச்சர்கள், கேரள முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் தினமும் மக்களுக்கு தகவல் தெரிவிப்பதை பார்த்தாவது திருந்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

“வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க விமானங்களை அனுப்புகிறோம். உத்தரப்பிரதேசத்திலிருந்து பீகாருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் நடந்தே செல்லும் நிலையை வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு?” என்று கடுமையாக சாடியிருக்கிறார் பிரியங்கா காந்தி.

ப.சிதம்பரமோ, “மத்திய அரசின் முன்தயாரிப்பற்ற தன்மையையே இந்த ஊரடங்கு வெளிப்படுத்தி இருக்கிறது. மக்கள் பஸ்களில் நெருக்கிக் கொண்டும், நடந்தும் இந்த ஊரடங்கின் தன்மையை அம்பலப்படுத்திவிட்டனர்’’ என்று கூறினார்.

You may also like
ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் – TAMIL LEADERS – 3
கனடா – Indian Scientists series – 3
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் – Tamil leaders – 2
ஊரடங்கு உத்தரவால் வீடியோ கால் மூலம் நடைபெற்ற திருமணம்

Leave a Reply