Home > அரசியல் > திண்டுக்கல் திமுகவில் இன்னொரு அழகிரி குடும்பமா?

திண்டுக்கல் திமுகவில் இன்னொரு அழகிரி குடும்பமா?

திண்டுக்கல் ஐ.பெரியசாமி என்றால் அவருக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அவருடைய உழைப்புக்கு மரியாதை செய்யும் வகையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியும், அவருடைய மகன் செந்தில்குமாருக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியும் கொடுத்தபோது யாரும் முகம் சுளிக்கவில்லை.

செந்தில்குமாரும் அவருக்குக் கொடுத்த பொறுப்பை நல்லபடியாகவே செய்கிறார் என்ற பேர் இருந்தது. ஆனால், இப்போது திண்டுக்கல் மாவட்டமே சிரிப்பாய் சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்று கட்சிக்காரர்கள் கொந்தளிக்கிறார்கள்.

மதுரையில் அண்ணனே, அண்ணியாரே என்று போஸ்டர்கள் ஒட்டி ரணகளப்படுத்திய திமுகவினர், ஒருகட்டத்தில் இளவரசரே என்று தயாநிதிக்கும் போஸ்டர் போட்டார்கள். அதுவே கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

அதே கலாச்சாரம் இப்போது திண்டுக்கல்லையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கியிருக்கிறது. செந்தில்குமாரின் மனைவி மெர்சியை ஐ.பெரியசாமி எப்போதுமே தனது வீட்டில் சேர்ப்பதில்லை. அதேசமயம் மகனுடன் நல்ல உறவை வைத்திருக்கிறார்.

இருவருடைய பெயரையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் வகையில் செந்தில்குமாரின் மனைவி கட்சி விவகாரங்களில் தலையிடுகிறார். அவர் மட்டுமின்றி, தனது 10 வயது பையனுக்கும் கட்சிக்காரர்கள் தலைவணங்கும்படி செய்கிறார். அவருக்கு திண்டுக்கல் நகரச்செயலாளர், ஒன்றியச் செயலாளர்கள் கைகட்டி சேவகம் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாக வருத்தப்படுகிறார்கள்.

இதுவாவது பரவாயில்லை செந்தில்குமார் வீட்டில் வேலைசெய்பவரின் குடும்பமும் கட்சி விவகாரங்களில் மூக்கை நுழைக்கிறது. அதுமட்டுமின்றி, கட்சி உறுப்பினரை கட்சி அலுவலகத்திலேயே வைத்து செந்தில்குமாரின் மனைவி வீட்டு வேலைக்காரர் அடிக்கும் அளவுக்கு  சென்றிருக்கிறார். ஆனால், வேலைக்காரர் வீட்டுக்கு வந்து மெர்சி ஆறுதல் கூறிச் சென்றிருக்கிறார்.

அன்னையாகிய அண்ணியாரே என்று போஸ்டர் போடுகிறார்கள். செந்தில் குமாரின் மகன் செந்தில் ஆதவன் செய்யும் பந்தாவும் அவருக்கு சேவகம் செய்யும் கட்சி நிர்வாகிகளின் அடிமைத்தனமும், மதுரையைப் போல திண்டுக்கல் திமுகவையும் பாதித்துவிடுமோ என்றே மூத்த கட்சிக்காரர்கள் கவலைப்படுகிறார்கள்.

Leave a Reply