பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், நிவாரண உதவிகளையும் வழங்கிவருகிறார்கள்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (நவம்பர் 26) பிற்பகல் சைதாப்பேட்டை டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மற்றும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டிய கமல்ஹாசன், “வேறு இடம் வழங்கப்படும் எனக் கூறி தாங்கள் ஏமாற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
நிவாரணம் என்பது அந்தந்த வருடத்திற்குள் முடிந்துவிடும். இப்பொழுது முடிவு செய்து நிரந்தரமான நிவாரணம் அளிக்க வேண்டும்.
தேர்தல் வேறு வருவதால் நிரந்த இடம் அளிப்போம் என்று அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.
இந்த மக்கள் வேறு இடம் கொடுத்தால் செல்வதற்கு தயாராக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர்” என்று வலியுறுத்தினார்.
இந்த பேரிடரை அரசு எவ்வாறு கையாண்டுள்ளது என்ற கேள்விக்கு, “பல உயிர் சேதங்களுக்குப் பிறகு அரசு பாடம் கற்றுக்கொண்டுள்ளது.
இந்த வருடம் சென்னை கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், சிறப்பாக இருந்ததா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்” என்று பதிலளித்தார் கமல்ஹாசன்.