Home > அரசியல் > பொதுக்குழு ஒத்திகை நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின்

பொதுக்குழு ஒத்திகை நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக வரலாற்றில் முதல் முறையாக ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் காணொலி வடிவத்தில் நாளை(செப்டம்பர்9) நடைபெறுகிறது.

பொதுவாகவே திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் பொதுக்குழு என்றால் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையை நோக்கி படையெடுப்பார்கள்.

ஆனால் இந்தப் பொதுக்குழுவிற்காக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் அவரவர் மாவட்டத்தில் இருந்தபடியே காணொலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதனால் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் சென்னையிலிருந்து தத்தமது ஊரை நோக்கி சென்று விட்டனர்.மேலும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கழு கூட்டம் என்பதால் இதன் தொழில் நுட்ப மேலாண்மையை திமுகவின் தேர்தல் உத்தி பணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் மேற்கொள்கிறது.

அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் ஒரு அரங்கத்தை ஏற்பாடு செய்து அதில் பொதுக் குழு உறுப்பினர்களை கூட்டவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

இதன் அடிப்படையில், செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவின் ஏற்பாடுகளை செப்டம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமையில் இருந்தே கண்காணிக்க தொடங்கிவிட்டார்கள் ஐபேக் குழுவினர்.

செப்டம்பர் 5ஆம் தேதி இரவு 7.30க்கு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சென்னை ஐபேக் குழுவினரிடம் இருந்து போன் சென்றது. “பொதுக்குழுவை எந்த அரங்கத்தில் கூட்டம் முடிவெடுத்து இருக்கீங்க? நாளைக்கு காலையிலே நாங்கள் சூம் மீட்டிங்கில் வர்றோம். பொதுக்குழு நடக்க இருக்கும் மாவட்ட அரங்கங்களை முழுசா கண்காணிப்போம். ரெடியாயிருங்க”” என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் பொதுக்குழு கூட்டப்படுவதில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அம்சங்களை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு அனைவருக்கும் அனுப்பினார்கள்.

பொதுக்குழு நடக்கவிருக்கும் அரங்கத்தை கிருமிநாசினி கொண்டு முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாற்காலிக்கும் இடையில் இரண்டு அடி இடைவெளி விடப்பட வேண்டும். அரங்கத்தின் வாசலிலேயே சானிடைசரும் முகக் கவசமும் கொடுக்கப்பட வேண்டும்.

அரங்கத்தின் வாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் ஒவ்வொருவரையும் சோதனை செய்ய வேண்டும். கூட்டத்தில் பங்குபெற்று வெளியேறும் வரை அனைவரும் கட்டாயம் முகக் கவசத்தோடு இருக்க வேண்டும்.

இந்த விதிகளை தாண்டி தொழில்நுட்ப ரீதியான விஷயங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்கள் ஐபேக் குழுவினர். அதன்படி ஒவ்வொரு அரங்கத்திலும் எல்.இ.டி திரை, டிவி வைக்கப்பட வேண்டும். லேப்டாப்பில் ஜும் ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அது எல்இடி திரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பொதுக்குழு நடக்கும் அரங்கத்தில் high-speed இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். எத்தனை உறுப்பினர்கள் பங்கு பெறுகிறார்களோ அத்தனை மைக்குகள் வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற தொழில்நுட்ப ரீதியான விஷயங்களையும் ஐபக் பட்டியலிட்டது.

மாவட்டச்செயலாளர்களும் பொறுப்பாளர்களும் பரபரப்பாகி ஞாயிற்றுக்கிழமை காலை ஐபேக் ஒருங்கிணைப்பாளர்கள் காணொலி முறையில் வந்ததும் அரங்கத்தை கேமரா மூலம் சுற்றிக் காட்டினார்கள்.

அதில் உறுப்பினர்கள் சில திருத்தங்களை தெரிவித்து அதன்படி செய்யச் சொன்னார்கள். அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் அந்த அரங்கங்களில் சமூக இடைவெளி படி நாற்காலிகளை வரிசை படுத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 8 ) காலை 11.30க்கு திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலமாக அனைத்து மாவட்ட பொதுக்குழு அரங்கங்களிலும் தோன்றினார். ஒவ்வொரு அரங்கத்தையும் அங்குலம் அங்குலமாக பார்வையிட்ட ஸ்டாலின், நாற்காலி வரிசைகள், அரங்க அமைப்பு, மின்விளக்கு ஆகியவற்றை உற்றுக் கவனித்தார்.

ஹலோ நான் பேசுறது கேக்குதா… என்னை தெரியுதா… கடைசி வரிசைக்கு போய் உட்காருங்க. அங்கிருந்து என்னைப் பாருங்க… இப்ப நான் தெரியுறனா… குரல் கேட்குதா? நீங்க பேசுங்க நாக் செக் பண்றேன்” என்றெல்லாம் விதவிதமாக கேள்விகள் கேட்டு ஒவ்வொரு மாவட்ட பொதுக்குழு அங்கத்தையும் இன்றைக்கே பார்வையிட்டு ஒத்திகைப் பொது குழுவையும் நடத்தினார் ஸ்டாலின்.

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

Leave a Reply