கொரோனா வைரஸ் தொற்றியவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திறன் இந்தியாவுக்கு மிகவும் குறைவு. நிதி நிலைமையும் சரியில்லை. ஆனாலும், கடைசியாக கையாள வேண்டிய ஒரு நடவடிக்கையை எதற்காக மக்கள் மீது திடீரென்று சுமத்தினார் பிரதமர்?
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் முழு ஊரடங்கு செவ்வாய்க்கிழமையன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்தது. மாநிலங்களின் சக்திக்கு மீறி, முழு சுகாதாரத்துறையும் களம் இறக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களும், அவர்களுக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்களும் பற்றாக்குறையாக இருப்பது தெரிந்தும் இந்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தினக்கூலித் தொழிலாளர்களோ தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடும் விருப்பத்தில் சாலைகளில் நடைபயணமாக செல்கிறார்கள். இதயத்தை வலிக்கச்செய்யும் அவர்களுடைய சிரமம் மிகுந்த பயணத்தின் படங்கள் அரசாங்கத்தின் அவசரக்குடுக்கை அறிவிப்பின் அவலத்தின் சாட்சிகளாக அமைந்திருக்கின்றன.
இந்த ஊரடங்கு அறிவிப்பின் காரணத்தையும் விளைவையும் தெரிந்துகொள்ளும் முயற்சியில் ஒரு அடி பின்வாங்கினால், அறிவிப்புக்கான மூன்று முக்கிய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழிக்கும் நிலையில் இருக்கிறோம்.
பதில் தெரியாத முதல் கேள்வி, இந்த 21 நாட்கள் முழு ஊரடங்கை அறிவிப்பதற்கு, அர்த்தமுள்ள ஒரு காரணத்தையும் பிரதமர் மக்களுக்கு தெரிவிக்கவில்லை.
இரண்டாவது வாரத்தில் நுழைந்த நிலையிலும், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மேற்கொண்ட அவசரமான, கொடுமையான இந்த அறிவிப்பை நிறைவேற்ற போதுமான சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் சமூகப்பரவல் நிலையை எட்டவில்லை என்றும் பெரிய அளவில் நோய்த் தொற்று ஏற்படாது என்றும் சீரற்ற பரிசோதனையை தொடர அவசியமில்லை என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் கூறுகிறது.
எனவே, இந்தியா தற்போது உள்ள சூழலில் இதுபோன்ற நீண்டகால ஊரடங்கு அவசியமா என்ற கேள்வி எழுவது நியாயமானதுதான். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான வழக்கில் மத்திய சுகாதாரத்துறை, மரண விகிதத்தை தெரிவித்துள்ளது. 2.6 சதவீதம்தான் இறப்பு என்று கூறியுள்ளது.
தொற்றுநோய் பரவலாக மக்களைப் பாதித்திருப்பதற்கான ஆதாரங்கள் எதையும் பிரதமரோ, சுகாதார அமைச்சகமோ காட்டவில்லை. அப்படி இருந்தால்கூட இந்த ஊரடங்கை நியாயப்படுத்தலாம்.
இந்த சூழ்நிலையில், அரசின் நடவடிக்கை செயல்திறனைக் காட்டிலும் எதிர்வினையையே உருவாக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், அரசாங்கம் இதுவரை நம்பகமான, அறிவியல் புள்ளிவிவரங்களையோ வழங்கவில்லை. இந்த ஊரடங்களை ஆதரிப்பதற்கான ஒரு காரணத்தைக்கூட வெளியிடவில்லை.
உண்மையில், பணமதிப்பிழப்பைப் போல மத்திய அரசு முதலில் முடிவை எடுத்துவிட்டு, திட்டமிடுதல், மற்றும் நிர்வாக உத்தரவுகளை மிகத் தாமதமாக வெளியிடுகிறது. பிரதமரின் அறிவிப்புக்கு பிறகே, மாநில அரசுகள் நிலைமைக்கு ஏற்ப எதிர்வினையாற்றுகின்றன.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல், சட்டமன்ற நடவடிக்கைகளை உறுதிசெய்யாமல் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு அவசரகால நெருக்கடியில், தொற்றுநோய் அபாயத்தின் போதுகூட அதிகாரத்தின் நெருக்குதலுக்கு இந்த ஊரடங்கு வழி அமைத்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போன்ற கடுமையான வார்த்தைகளை பிரதமர் பயன்படுத்தியது, போலீஸாரின் சர்வாதிகாரப் போக்குகளை அனுமதிக்க வழி அமைத்துவிட்டது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைக்கூட பெற முடியாமல் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறது. நாட்டின் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்களின் நடமாட்டத்தைக்கூட கடினமாக்கி இருக்கிறது.
இரண்டாவது பெரிய கேள்வி இதுதான். 21 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிப்பதால், கடுமையாக பாதிக்கப்படும் தொழிலாளர்களைப்பற்றி கவலைப்பட்டாரா? குறிப்பாக தற்போது சாலைகளில் குடும்பத்தோடு நடைபயணம் மேற்கொண்டு துயரங்களை அனுபவிக்கும் புலம்பெயர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களைப் பற்றி மோடி நினைத்துப் பார்த்தாரா? அவர்களுக்கு பொருளாதார இழப்பீடு மற்றும் அவர்களுடைய புனர்வாழ்வுக்கு எடுத்த நடவடிக்கை என்ன?
ஏழைகளுக்காக நிதியமைச்சர் அறிவித்த நிவாரணம் என்ன? அது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே மத்திய அரசின் கருணைத் தொகைக்கான உஜ்ஜவாலா யோஜனா, பணப்பரிமாற்றத்துக்கான ஜன்தன் வங்கிக்கணக்கு, பிபிஎல் ரேஷன் அட்டை ஆகியவற்றை பயன்படுத்துகிறவர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும் என்பது மிகச்சிறிய தொகை.
கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் நபர்களும் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவர்கள் சமூக இடைவெளியுடன் வேலை செய்ய முடியும் என்றாலும் 144 தடை உத்தரவு காரணமாக அவர்களுடைய வேலையும் பறிக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவின் பல மாநிலங்களின் பொருளாதாரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. ஆகவே அவர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்திருக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களால்தான் ஊதியம் இலகுவாக இருந்தது.
விவசாயமும், கட்டுமானத் தொழிலும், சுமைத்தொழில் பணி, சிறுதொழில் பணியாளர்கள், தெருவோர வியாபாரம் ஆகியவையும் கூட அவர்களால்தான் குறைந்த ஊதியத்தில் நடைபெற்றது.

இந்த முழு ஊரடங்கால் இந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால் அவர்கள் வெளியேறிய நகரங்களில் ஊதியம் அதிகரிக்கும். தொழிலாளர்களும் கிடைக்க மாட்டார்கள். பல்வேறு தொழில்கள் மூடப்பட்டே இருக்கும். அமைப்பு மற்றும் அமைப்புசாரா வேலைகளில் வேலையிழப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும்.
இந்த நிலையில்தான் மூன்றாவது பெரிய கேள்வி எழுகிறது. வரும் மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கு மத்திய அரசிடம் உள்ள செயல்திட்டம் என்ன?
ரிசர்வ் வங்கி, தனது நிதிக் கொள்கையிலிருந்து, நிதிச் சந்தையை காப்பாற்ற சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கிக் கடனாளர்களுக்கு உதவும் வகையில் அந்த அறிவிப்பு இருக்கிறது.
ஆனால், ஏற்கெனவே நமது பொருளாதார கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது. தேவைகள் குறைந்திருக்கிறது. குறைவான அளவே ஊதிய உயர்வு இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. இத்தகைய நிலையில் நிதிக்கொள்கை என்பது ஓரளவுக்குத்தான் தளர்த்த முடியும். அது பொருளாதார வளர்ச்சியில் அங்கம் வகிக்கிற அனைவரையும் முன்னேற்றும் அளவுக்கு இருக்க முடியாது.
ஒரு ஆபத்தான வைரஸை எதிர்கொள்வதற்கான முயற்சியில் ஊரடங்கு என்பது சமூகத்தின் நேரத்தை விலைகொடுக்கிறது. ஆனால், சமூக பொருளாதார நிலை மோசமாக இருக்கும்போது, சோதனை செய்யவும், கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கவும் போதுமான வசதியில்லை என்பது கண்கூடாக தெரிந்த நிலையிலும், இறுதி வாய்ப்பான முழு ஊரடங்கை அறிவித்தது ஏன்?
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கைக் காட்டிலும் புதுமையான, பொருத்தமான ஊரடங்கு மாதிரிகள் இருக்கின்றன. அதாவது, அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்துவது. அதன்மூலம் மனிதாபிமான சேவைகளை வழங்கி, செலவுகளை இயன்றவரை குறைக்க முடியும். எது எப்படி இருந்தாலும், வரும் வாரங்களில் இந்த ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளின் சத்தம் பெரிதாகவே செய்யும்.
(இந்த கட்டுரையாளர் தீபன்ஷு மோகன், ஜிண்டால் சர்வதேச விவகாரங்களுக்கான கல்லூரியில், பொருளாதார பேராசிரியராக பணிபுரிகிறார்.)
மொழிபெயர்ப்பு – Athanurchozhan