Home > அரசியல் > அதிமுக அவை தலைவராகும் அன்வர்ராஜா

அதிமுக அவை தலைவராகும் அன்வர்ராஜா

“அதிமுகவில் அவைத் தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பதவி. சாதாரணமான நேரங்களில் அவைத் தலைவரின் முக்கியத்துவம் தெரிவதில்லை.

கட்சியில் பொதுக்குழு கூடும்போதோ, குழப்பம் ஏற்படும்போதா அவற்றைத் தீர்ப்பதில் அவைத் தலைவரின் பங்கு அளப்பரியது. இப்போது அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் 2010 ஆம் ஆண்டில் இருந்து இப்பதவியில் இருக்கிறார்.

தற்போது முதுமை காரணமாக வீட்டிலேயே இருக்கிறார். சிலமாதங்களுக்கு முன் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது முழுமையான ஓய்வில் இருக்கிறார் மதுசூதனன்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது அவைத் தலைவரான மதுசூதனன் அப்போதைக்கு தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் தரப்புக்கு ஆதரவளித்தார். ‘அவைத் தலைவரே எங்கள் பக்கம் இருக்கிறார்’ என்று அப்போது பன்னீர் தரப்பு குதூகலித்தார்கள்.

இதையடுத்து அப்போது சசிகலா அவைத் தலைவர் பதவியில் இருந்து மதுசூதனனை நீக்கி, செங்கோட்டையனை அவைத் தலைவராக நியமித்தார்.

தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்த வழக்கு நடந்தபோது இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான ஓ.பன்னீர் அணிக்கு வழங்கியது.

இதன் மூலம் அதிமுகவில் மதுசூதனனின் முக்கியத்துவம் வெகுவாக அதிகரித்தது. அணிகள் இணைந்த பிறகு மீண்டும் மதுசூதனனே அவைத் தலைவராகத் தொடர்ந்தார்.

இந்நிலையில்தான் தற்போது மதுசூதனனின் வயது, உடல் நிலை கருதி அவரை அவைத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கலாம் என்று எடப்பாடி கருதியிருக்கிறார்.

இதுகுறித்து ஓ. பன்னீர் செல்வத்திடமும் கூறியுள்ளார். பொதுக்குழு, செயற்குழு என அதிமுகவின் எந்த கூட்டமாக இருந்தாலும் அதற்கு அவைத் தலைவர்தான் தலைமை வகிக்க வேண்டும்.

தேர்தல் நெருங்குகிற இந்நிலையில் மதுசூதனனின் உடல் நிலை கருதி அவரை மேற்கொண்டு உபத்திரவப் படுத்த வேண்டாம் என்று கருதுகிறார்கள்.

அதன் அடிப்படையில்தான் அவருக்கு பதிலாக கட்சியில் இன்னொரு சீனியரை அவைத் தலைவராக நியமிக்கலாம் என்ற பேச்சும் அதிமுக டாப் லெவலில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் இன்று (ஆகஸ்டு 26) மதுசூதனன் இல்லத்துக்கு சென்று அவரது நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதேநேரம் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார் என்ற கேள்வியும் எழத் தொடங்கியிருக்கிறது. அவைத் தலைவர் என்பது கௌரவம் மிக்க பதவி.

இந்தப் பதவியில் அமர சீனியர்களான தம்பிதுரையின் பெயரும், அன்வர் ராஜாவின் பெயரும் உச்சரிக்கப்படுகின்றன.

தம்பிதுரை தற்போது கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆக இருக்கிறார். அவரை விட சீனியர் அன்வர் ராஜா.

எம்.ஜிஆரின் மன்ற காலத்தில் இருந்தே முக்கியப் பங்கு வகிக்கும் அன்வர் ராஜா, அதிமுக உருவானதில் இருந்தே இக்கட்சியில் இருக்கிறார்.

மண்டபம் ஒன்றிய பொறுப்பில் இருந்து படிப்படியாக வளர்ந்து இன்று அதிமுகவின் மூத்த முன்னோடியாக இருக்கும் அன்வர் ராஜா அவைத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர்.

அதுவும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அன்வர் ராஜாவை அதிமுகவின் உச்சபட்ச பதவியில் அமர்த்துவது பொருத்தமாக இருக்கும் என்ற ஆலோசனை டாப் லெவலில் நடந்துகொண்டிருக்கிறது”

You may also like
என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்
அமித்ஷா சென்னை வருகை ரத்து – அதிமுகவினர் மிரட்சி!
முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

Leave a Reply